Friday, June 14, 2024
Home » வலுவான எதிர்காலத்திற்கு இந்நாட்டு சுகாதார சேவை தொழிற்படையை மாற்றியமைக்க வேண்டும்

வலுவான எதிர்காலத்திற்கு இந்நாட்டு சுகாதார சேவை தொழிற்படையை மாற்றியமைக்க வேண்டும்

– மருத்துவ சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்கு சுகாதார சேவைகளை உயர் தரத்தில் பேண வேண்டியது அவசியம்

by Rizwan Segu Mohideen
September 10, 2023 9:54 am 0 comment

– ஜோசப் பிரேசர் வைத்தியசாலையில் நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

வெளிநாட்டு நோயாளர்களை இந்நாட்டுக்கு ஈர்க்கும் வகையில் மருத்துவ சுற்றுலாத்துறை (Medical Tourism) மற்றும் சுகாதார சேவைகள் என்பவற்றை உயர் தரத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கு உகந்த, முழுமையான சுகாதார கொள்கை அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதற்காக அதிகளவில் வைத்தியர்களை உருவாக்குவதற்கு வைத்திய பீடங்களையும் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டியது அவசியம் என்றும் அரசாங்கத்தினால் நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் வைத்திய காப்புறுதி பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜோசப் பிரேசர் வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை (08) நடைபெற்ற நூற்றாண்டு விழாவிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்த ஜனாதிபதிக்கு வைத்தியசாலை நிர்வாகச் சபையினரால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டதை தொடர்ந்து மங்கள விளக்கேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சுமல் பெரேரா (எக்ஸஸ் கூட்டு நிறுவனம்), வைத்தியர் மனிலால் பெர்னாண்டோ (தலைவர் – பொறுப்பாளர் சபை ஜோசப் பிரேசர் வைத்தியசாலை) தியோ பெர்னாண்டோ (நிறைவேற்றுப் பணிப்பாளர் – ஜோசப் பிரேசர் வைத்தியசாலை) தோமஸ் டெட்வைலர் (பொறுப்பாளர் – ஜோசப் பிரேசர் வைத்தியசாலை) பேராசிரியர் ஹேமந்த சேனநாயக்க (பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணர்) தலைமைத் தாதி காந்தி சுவணர்னலதா ஆகியோரும் மங்கள விளக்கேற்றினர்.

இதன்போது தபால் திணைக்கள அதிபர் பீ.சத்குமாரவினால், ஜோசப் பிரேசர் வைத்தியசாலையின் நினைவாக முத்திரையொன்று வெளியிடப்பட்டதோடு. அதன் முதற்பிரதி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.

இலங்கையின் தேயிலை கைத்தொழிலை ஆரம்பிக்க முக்கிய பங்காற்றிய ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோசப் பிரேசர் மற்றும் அவரது மனைவி ஆகியோரால் இலங்கையில் நினைவுச் சின்னமாக அமைக்கப்பட்ட ஜோசப் பிரேசர் வைத்தியசாலை இந்நாட்டு அபிவிருத்திக்காக அவர்கள் செய்த அர்பணிப்பை காண்பிக்கிறது.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“ஜோசப் பிரேசர் வைத்தியசாலை என்பதை விட நூற்றாண்டை கடந்துள்ள நிறுவனம் என்று கூற முடியும். பிரேசர்கள் ஸ்கொட்லாந்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற தலைமுறையை சேர்ந்தவர்கள். அங்கிருந்துதான் ஜோசப் பிரேசரும் இலங்கை வந்தார்.

பிரித்தானியர்கள் இலங்கைக்கு தேயிலை தொழிலை அறிமுகப்படுத்திய காலத்தில் அவர் ஒரு தோட்ட உரிமையாளராக இருந்தார். இலங்கைத் தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் பிடகந்த தோட்டத்தை மையமாகக் கொண்டு தோட்டத் தொழிலை நடத்திச் சென்றார். இறுதியாக அவர் இலங்கையிலேயே உயிர் நீத்தார். ஏனைய தோட்ட உரிமையாளர்களுக்கு மாறாக அவரும் அவரது மனைவியாரும் இலங்கையில் ஓர் அடையாளத்தை பதித்துவிட்டு சென்றனர்.

இந்நாட்டுக்கு அவர் சேவையாற்றியுள்ள அதேநேரம் நாட்டை கட்டியெழுப்பவும் பங்களிப்புச் செய்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலில் இலாபம் ஈட்டிய ஏனைய நூற்றுக்கணக்கான தோட்ட உரிமையாளர்களுக்கு மத்தியில் அவரும் அவரது குடும்பத்தினரும் இந்த நாட்டிற்காக ஜோசப் பிரேசர் வைத்தியச்சாலையை விட்டுச் சென்றுள்ளனர்.

உண்மையில், இந்த மருத்துவமனை நிறுவப்பட்டபோது, ​​இந்த பகுதி வளர்ச்சியடைந்திருக்கவில்லை. வீடுகளும் அதிகளவில் இருக்கவில்லை என்பதால் அரச ஊழியர்கள் அனைவரையும் இவ்விடத்தில் தங்க வைப்பதற்கான முயற்சிகளும் காணப்பட்டன.

அதேபோல் பொலிஸ் நிலையமொன்றை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இறுதியாக ஜோசப் பிரேசர் வைத்தியச்சாலை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் வேறு முயற்சிகள் காணப்படவில்லை.

எனது பாட்டனார் பாட்டிக்கு சிரிபா வீதியில் காணியொன்றை வாங்கிக் கொடுத்திருந்தார். அங்கு எனது அம்மா அடிக்கடிச் சென்று வருவதை கண்டிருக்கிறேன். 1950 களில் அது வெற்று இடமாக காணப்பட்டது. இந்த வீதியில் இரண்டு அல்லது மூன்று வீடுகளை மாத்திரமே காணக்கூடியதாக இருக்கும்.
இவ்வாறானதொரு வைத்தியசாலை இல்லாததையிட்டு ஆண்கள் பொறாமை கொள்வர். ஆண்களுக்கு இவ்வாறானதொரு வைத்தியசாலை இதுவரையில் கிடைக்கவில்லை. மறுமுனையில் அது பெண்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு என்பதோடு, நானும் நோயாளர்களை பார்க்க பல தடவைகள் இந்த வைத்தியசாலைக்குச் சென்றுள்ளேன். எவ்வாறாயினும் இவ்வாறானதொரு வைத்தியசாலை எமக்கு கிடைத்திருப்பதையிட்டு நாம் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டும்.

இந்த நிறுவனம் நன்றாக பராமரிக்கப்பட வேண்டும். இதை ஏற்றுக்கொள்வதற்கு வைத்தியசாலையின் தலைவர் சுமலை விட பொருத்தமான எவரும் இருக்க முடியாது. ஜோசப் பிரேசர் வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையில் சிறந்த முறையில் பராமரித்து வருகிறார். நம்மிடம் உள்ள வளங்களை கொண்டு என்ன செய்ய முடியும் என்பதற்கு அவர் சிறந்த உதாரணமாவார்.

இலங்கையில் உள்ள இவ்வாறான வைத்தியசாலைகள் எதிர்காலத்தில் இலங்கையர்களுக்கு மட்டுமன்றி வெளிநாட்டினருக்கும் தேவையான சேவைகளை வழங்க முடியும். இதன் வடிவமைப்பைப் பார்க்கும் போது, இது ஹோட்டலா, வைத்தியசாலையா என்று கேள்வி எழும். நீங்கள் இங்கு வந்து பார்க்கும் போது நோயாளர்களை பார்க்க வந்திருக்கிறோமா, வார இறுதி விடுமுறையை கழிக்க வந்திருக்கிறோமா என்ற கேள்வி ஏற்படும். வைத்தியசாலையில் சேவைகள் இவ்வகையிலேயே உயர் தரத்தில் காணப்பட வேண்டும்.

இந்நாட்டுக்கு வெளிநாட்டு நோயாளர்களை மருத்துவ தேவைக்காக வரவழைப்பதற்கு மருத்துவ சுற்றுலாத்துறை மற்றும் சுகாதார சேவைகள் என்பன உயர் தரத்தில் காணப்பட வேண்டும். அவ்வாறான சேவைக்கு இந்த வைத்தியசாலையே உதாரணமாகும். எமது சுகாதார கொள்கை தொடர்பில் நாம் மீளச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்நாட்டி வைத்தியசாலை கட்டமைப்பு அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகள் என பிளவுபட்டு காணப்படுகின்றன. பெருமளவான வைத்தியர்கள் நாட்டை விட்டுச் செல்கிறார்கள்.

அதனால் நாட்டிற்குள் அதிகளவில் வைத்தியர்களை உருவாக்க வேண்டியுள்ளது. அதற்கமைய முதலாவது அரச சார்பற்ற வைத்திய பீடத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.

தெற்காசியாவின் தொழில்நுட்ப நிறுவனமான (SAITM) இனை மொறட்டுவ வைத்தியசாலைக்கு கையளித்துள்ளோம். அதேபோல் இன்னும் பல மருத்துவ பல்கலைக்கழகங்களை நாட்டில் ஆரம்பிக்க முடியும் என நம்புகிறோம். வைத்தியர்களை அதிகளவில் உருவாக்குவதற்கு அதனை தவிர மாற்று வழிகள் எவையும் இல்லை.

இலங்கை வைத்தியர்கள் இல்லாமல் ஐக்கிய இராச்சியம் தனது வைத்தியசாலைகளை நடத்திச் செல்வதில் நெருக்கடியை எதிர்கொள்கிறது. அதனால் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுடன் சேர்ந்து, நாங்கள் ஐக்கிய இராச்சியத்தின் வைத்தியசாலை கட்டமைப்பை நாமும் நடத்திச் செல்கிறோம் என்று கூறினால் தவறாகாது.

உதவி பெறும் நாடாக மட்டுமன்றி, உதவி வழங்கும் நாடாகவும் இலங்கை மாற வேண்டும். மேலும், அரச மற்றும் தனியார் துறைகள் இணைந்து செயற்படுவதற்கான செயற்றிட்டங்களை நாம் தயாரித்துள்ளோம்.

அரசாங்கத்தினால் நாட்டு பிரஜைகளுக்கு மருத்துவக் காப்புறுதி பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது. அப்போது சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலைக்குச் செல்வதா அரச வைத்தியசாலையை நாடுவதா என்பதை மக்கள் தீர்மானிப்பர்.

இந்த நாட்களில் நானும் ஒரு வைத்தியரை போலவே செயற்படுகிறேன். மரணத்தின் இறுதி தருவாயிலிருக்கும் நோயாளியை சுமந்துச் செல்லும் அதேநேரம் அவருக்கு சிகிச்சையளித்து காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.

திறந்த பொருளாதார கட்டமைப்பின் கீழ் நாடு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதனால் தனியார் நிறுவனங்களும் அபிவிருத்தி அடையலாம். அவ்வாறு இல்லாவிட்டால் நாட்டுக்கு முன்னேற்றம் கிட்டாது.

அதன்படி இலங்கையில் தேயிலை செய்கைக்கு அப்பால் சென்ற ஒருவராக ஜோசப் பிரேசரை கூறலாம். இலங்கையில் கோப்பிக்கான கேள்வி குறைந்து, தேயிலை செய்கை அதிகரித்த காலத்தில் அவரும் முன்னேறி நாட்டிற்கும் ஒரு வைத்தியசாலையை விட்டுச் சென்றுள்ளார். தற்காலத்தில் சுமல் பெரேரா போன்றவர்களுடன் இணைந்து இந்தத் துறையை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜோசர் பிரேசர் வைத்தியசாலையின் முகாமைத்துவ பொறுப்பாளர் மனிலால் பெர்னாண்டோ,

“இலங்கையில் காணப்படும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொண்டுள்ள துணிச்சலை பாராட்ட வேண்டும். இதற்கு முன்னர் காணாத நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் நாட்டின் முன்னேறத்துக்காக ஜனாதிபதி காண்பிக்கும் அக்கறை வர்வேற்புக்குரியது.

பொருளாதார சரிவு மற்றும் சவால்களுக்கு மத்தியில் நாட்டின் பொருளதாரத்தை நிலைப்படுத்த ஜனாதிபதி மேற்கொண்டுள்ள முயற்சிகளையும் நினைவுகூற வேண்டும்.” என்றார்.

எக்ஸஸ் கூட்டு நிறுவன தலைவர் சுமல் பெரேரா ஜோசப் பிரேசர் வைத்தியசாலை பொறுப்பாளர் சபை தலைவர் வைத்தியர் மனிலால் பெர்னாண்டோ, வைத்தியர் மனிலால் பெர்னாண்டோ, நிறைவேற்றுப் பணிப்பாளர் தோமஸ் டெட்வைலர், பொறுப்பாளர் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணர் பேராசிரியர் ஹேமந்த சேனநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT