Home » புதிய கல்விச் சீர்திருத்தத்தில் பல்கலைக்கழகங்களில் பல்வேறு மாற்றங்கள்

புதிய கல்விச் சீர்திருத்தத்தில் பல்கலைக்கழகங்களில் பல்வேறு மாற்றங்கள்

– 63% ஆனோர் பல்கலை தகுதி பெற்ற போதிலும் அனைவரையும் இணைக்க பௌதிக வளம் இல்லை

by Rizwan Segu Mohideen
September 9, 2023 11:19 am 0 comment

– தெற்காசியாவின் கல்வி மையமாக இலங்கை மாற்றப்படும்
– மாணவர்கள் தெரிவு செய்யும் பாடநெறிகளின் அடிப்படையில் உதவித்தொகை; அதனைக் மீளப்பெறவும் முறைமை அவசியம்

தெற்காசியாவின் கல்வி மையமாக இலங்கை மாற்றப்படும் என உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேஷ் ராகவன் தெரிவித்தார்.

அந்த நோக்கத்திற்காக, புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் அறிவுசார் சுதந்திரத்தை உருவாக்கவும், அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் சமூகத்துடன் உறவை ஏற்படுத்தவும், பல்கலைக்கழகங்களை சர்வதேசமயமாக்கவும் முன்மொழிந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்,

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் நெருக்கடி குறித்து கடந்த காலங்களில் இரண்டு தலைப்புகளில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்து வருகின்றார். அதில் ஒன்று பொருளாதார மறுசீரமைப்பு. அடுத்த விடயம் கல்வி சீர்திருத்தம். ஏனெனில் கல்வியின்றி பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது என்பது அவருக்குத் தெரியும். ஒரு அறிவார்ந்த மனித வளத்தின் மூலமே உலகின் மாறிவரும் பொருளாதாரத்திற்கு ஏற்ற திட்டங்களை உருவாக்க முடியும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல், கொவிட் நோய்த் தொற்று மற்றும் போராட்டம் காரணமாக, உயர்கல்வி சில பின்னடைவுகளைச் சந்தித்தது. அவ்வாறு இருந்தாலும், இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து 63% மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக அத்தனை மாணவர்களையும் பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்வதற்கு போதுமான பௌதிக வளம் எம்மிடம் இல்லை.

உலகத் தரத்தின்படி, ஒரு பல்கலைக்கழகத்தில் பதினைந்து மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர் என்ற விகிதத்தில் கல்விக் கட்டமைப்பு இருக்க வேண்டும். ஆனால் நமது நாட்டில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் முப்பது மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர் மாத்திரமே இருக்கிறனர். உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கும், பௌதிக வளங்கள் மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவதற்கும் கல்வி சீர்திருத்தம் முன்மொழியப்பட வேண்டும்.

மேலும், உயர்தரத்தில் கல்வி கற்றும் மாணவர்களில் அதிகமானோர் கலைப் பிரிவில் கற்று வருகின்றனர். இதற்குக் காரணம், இந்நாட்டில் உள்ள உயர்தரப் பாடசாலைகளில் பெரும்பாலான பாடசாலைகளில் கலைப் பிரிவு பாடங்கள் மாத்திரமே கற்றுக்கொடுக்கப்படுகின்றன. எனவே, பல்கலைக்கழகக் கல்விச் சீர்திருத்தத்தில், கலைப் பிரிவு படிக்கும் மாணவ, மாணவியரும் இளங்கலை விஞ்ஞானப் பட்டம் பெறும் வகையில் கல்வி முறை உருவாக்கப்பட வேண்டும். உயர்தர விஞ்ஞானப் பாடங்கள் தொடர்பில் பாடசாலை ஆசிரியர்களுக்கு மேலதிகமாக தனியார் கல்வி நிலையங்களில் கற்பிக்கும் ஆசிரியர்களின் நேரத்தைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப பௌதிக மற்றும் மனித வளங்களை அதிகரிக்க கல்வி சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும். உயர்தரத்தில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களையும் பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்ள வேண்டுமாயின், ஆய்வு கூடங்கள், விடுதிகள் நிர்மாணிப்பது உள்ளிட்ட பௌதிக வசதிகளை வழங்கவும் மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவதற்கும் இரண்டு ரில்லியன் ரூபா தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் மிகப் பாரிய நிதியம், சேமலாப நிதியம் ஆகும். இவ்வாறு முழுமையான கல்வி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அந்த நிதியத்தில் உள்ள தொகையில் சுமார் 50% சதவீதம் அளவில் நிதி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பொருளாதார ரீதியில் நெருக்கடியில் உள்ள ஒரு நாடு தற்போது இவ்வாறான பாரிய தொகையை ஒதுக்குவது சாத்தியமற்றது என்ற வகையில், உயர்கல்விக்கான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்போது பல்வேறு மாற்று வழிகளைக் கையாள்வது குறித்து முன்மொழிவுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

திறந்த பல்கலைக்கழகத்தை விரிவுபடுத்தல், தற்போதுள்ள பல்கலைக்கழகங்களில் மேலதிக வளாகங்களை உருவாக்குதல், தொழில்நுட்பம் சார் பாடநெறிகள் கற்பிக்கப்படும். அரச அனுமதி பெற்ற தனியார் பல்கலைக்கழகங்களில் (TOP UP Degree) பட்டங்களை வழங்குதல், தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்க வாய்ப்புகளை வழங்குதல், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கிளைகளாக இந்நாட்டில் இயங்கிவரும் கல்வி நிறுவனங்களை கண்காணிப்புக்கு உட்படுத்தி மேம்படுத்தல் மற்றும் மெய்நிகர் பல்கலைக்கழகங்களை (Virtual University) உருவாக்குதல் போன்ற வேலைத்திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளது. அத்துடன், அவை முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் உயர்தரத்தில் சித்திபெறும் அனைவரும் பட்டங்களைப் பெற்று தொழில்வாய்ப்புகளை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.

பல்கலைக்கழகங்கள் மூலம் உலகளாவிய பிரஜைகளை உருவாக்கும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். தற்போது தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கடன் வழங்கப்படுவதுபோல் அரச பல்கலைக்கழகங்களில் இணையும் மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும். அப்போது மாணவர்கள் தமக்கு அவசியமான பல்கலைக்கழகத்தைத் தெரிவு செய்வர். அவ்வாறு செய்யும்போது பல்கலைக்கழகங்களுக்கு இடையில் போட்டித்தன்மை ஏற்படும். அப்போது பல்கலைக்கழகங்களின் தரமும் உயர்வடையும்.

இதன்படி, மாணவர்கள் தெரிவு செய்யும் பாடநெறிகளின் அடிப்படையில் இந்த உதவித்தொகை வழங்கப்பட வேண்டும். மேலும் அதனைக் கால அவகாசத்துடன் மீளப்பெறும் முறைமையொன்றும் தயாரிக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் மாணவர்களுக்கு தொழில்வாய்ப்புகள் அதிகம் உள்ள பாடநெறிகளிகளைத் தொடரும் ஆர்வமும் அதிகரிக்கும். இவ்வாறு பல்வேறு விடயங்கள் முன்மொழியப்பட்டிருந்தாலும் அவை முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலே எமது நாட்டின் உயர் கல்வி மேம்படும்.” என்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x