இலங்கை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பப்பட வேண்டும். அதுவே நாட்டை உண்மையாக நேசிக்கும் அனைத்துத் தரப்பினரதும் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நாடு சுதந்திரமடைந்து 75 வருடங்கள் கடந்து விட்டன. இற்றைவரையும் மூன்றாம் மண்டல நாடாகவே உள்ளது.
இந்நாடு சுதந்திரமடையும் போது பொருளாதார ரீதியில் ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்த இடத்தில் இருந்தது. ஆனால் கடந்த 75 வருட காலப்பகுதியில் ஆசியாவின் பல நாடுகள் பாரிய வளர்ச்சி அடைந்திருக்கின்றன. இற்றைக்கு 75 வருடங்களுக்கு முன்னர் பொருளாதார ரீதியில் இலங்கைக்கு கீழ் மட்டத்தில் காணப்பட்ட பல நாடுகள் இன்று இலங்கைகயைக் கடந்து பல மடங்கு முன்னேற்றமடைந்து விட்டன.
இந்நாடு தொடர்ந்தும் பின்னடைந்து காணப்படுகிறது. அதற்கு சுதந்திரத்திற்கு பின் வந்த சில தலைவர்கள் முன்னெடுத்த கொள்கைகளில் காணப்பட்ட பலவீனங்களும் குறைபாடுகளும் தான் காரணங்களாக அமைந்திருந்தன. அந்த பலவீனங்களால் இந்நாடு பல்வேறு விதமான நெருக்கடிகளுக்கும் பாதிப்புக்களுக்கும் முகம்கொடுத்தது. அவற்றில் சுமார் மூன்று தசாப்த காலம் நாடு எதிர்கொண்ட உள்நாட்டு யுத்தம் குறிப்பிடத்தக்கதாகும். இந்த யுத்தத்தின் விளைவாக இந்நாடு விலைமதிக்க முடியாத வளங்களை இழந்துள்ளதோடு பொருளாதார ரீதியில் இரண்டொரு தசாப்தங்கள் பின்னடைவுக்கும் உள்ளாகியது.
பல்லின மக்கள் வாழும் இந்நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கு கடந்த காலங்களில் பல வாய்ப்புக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அந்த வாய்ப்புக்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கு இந்நாடு தவறியுள்ளது. அவ்வாறான சந்தர்ப்பங்கள் நாட்டின் பொருளாதார நலன்களைக் கருத்தில் கொண்டு செயற்பட்டிருந்தால் ஏனைய நாடுகளைப் போன்று இந்நாடும் பெரிதும் முன்னேற்றமடைந்திருக்கும். அதுவே பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும்.
இந்நிலையில் 2022 இன் ஆரம்ப காலப்பகுதியில் இந்நாடு அந்நியச் செலாவணி பற்றாக்குறையை அடிப்படையாகக் கொண்ட கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. அந்நெருக்கடி நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச்சென்றதோடு நாட்டின் தலைமையை ஏற்க எவரும் முன்வராத இக்கட்டான நிலைமை உருவாக்கியது. அவ்வாறான நெருக்கடியான சூழலில் நாட்டினதும் மக்களிதும் நலன்களை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் தலைமையைப் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து நாட்டையும் மக்களையும் பொருளாதார நெருக்கடியில் இருந்து விரைவாகவும் வேகமாகவும் மீட்டெடுப்பதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்தார். அதன் பிரதிபலன்களை நாடும் மக்களும் குறுகிய காலப்பகுதி முதல் பெற்றுக்கொள்ளத் தொடங்கினர்.
நாட்டினதும் மககளிதும் நலன்களை முன்னிலைப்படுத்தி பொருளாதார மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் வங்குரோத்து அடைந்திருந்த நாடு ஒரு வருட காலத்திற்குள் நம்பிக்கை அளிக்கக்கூடிய சாதகமான முன்னேற்றப்பாதையில் பயணிக்கின்றது. நிலைபேறான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இவ்வேலைத்திட்டங்களின் பிரதிபலன்களாகவே இவ்வாறான அடைவுகளை நாடு அடைந்து கொள்கிறது.
அதனால் பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். அதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும். இதைவிடுத்து 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் இந்நாடு முகம்கொடுத்தது போன்ற பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதே அனைத்து மக்களின் பிரார்த்தனையாக உள்ளது.
இவ்வாறான சூழலில் மல்வானை அல் முபாரக் தேசிய கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் நேற்றுமுன்தினம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ‘கட்டுநாயக்கா, பியகம போன்ற கைத்தொழில் மயமாக்கல் நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் முன்னெடுக்கப்பட்டிருந்தால் பொருளாதார நெருக்கடிக்குள் நாடு சிக்கியிருக்காது. பியகம முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் இன்று தெற்காசியாவின் சிறந்த வர்த்தக வலயமாக மாறியுள்ளது. அதனால் பிங்கிரிய, ஹம்பாந்தோட்டை, கண்டி, திருகோணமலை மற்றும் வடமாகாணத்தில் கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கான பல பகுதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டு அந்தப் பகுதிகள் அனைத்தும் வர்த்தக நகரங்களாக கட்டமைக்கப்படும். நாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில் மயமாக்கல் முயற்சிகளின் ஊடாக அடுத்த 15-20 வருடங்களில் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கு இவ்வாறான வேலைத்திட்டங்கள் இன்றியமையாதவையாகும். அதிலும் கைத்தொழில் மயமாக்கல் திட்டங்கள் மிகவும் முக்கியமானது.
ஆகவே ஜனாதிபதியின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கப்படுவது அவசியம். அது வளமான நாட்டை உருவாக்குவற்கான பங்களிப்பாக அமையும்.