இலங்கையானது கடந்த வருடத்தின் ஆரம்பப் பகுதியில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. அதன் விளைவாக மக்கள் பல்வேறு விதமான அசௌகரியங்களுக்கும் பாதிப்புக்களுக்கும் முகம்கொடுத்தனர். குறிப்பாக வரிசை யுகம் உருவானது. எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு நாட்கணக்கில் காத்திருக்கும் நிலைமை தோற்றம் பெற்றது. வீதி வாகனப் போக்குவரத்து இயல்பு நிலையை அடைந்தது. தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது. அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களது விலைகளும் பெரிதும் அதிகரித்துச் சென்றன. பணவீக்கம் பெரிதும் அதிகரித்ததோடு அந்நிய செலாவணிக் கையிருப்பும் பெருவீழ்ச்சி கண்டது. ரூபாவுக்கு நிகரான டொலரின் அதிகரித்து சென்றது.
இவ்வாறான நிலையில் வங்குரோத்து நிலையை அடைந்த இந்நாடு கடன்களை திருப்பிச் செலுத்த முடியாது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இவ்விதமான இக்கட்டான நிலைக்கு நாடு உள்ளான நிலையில் ஆட்சியாளர்கள் பதவி விலகிய போதிலும் நாட்டின் தலைமையை பொறுப்பேற்க எவரும் முன்வராத சூழல் உருவானது.
நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வங்குரோத்து நிலையை அடைந்திருந்த நாட்டை பொறுப்பேற்றார். அது இலங்கையின் பொருளாதாரப் பயணப் பாதையின் திருப்புமுனைக்கான அடித்தளமானது.
அந்த வகையில் பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு உழைக்க அனைத்துத் தரப்பினருக்கும் அவர் அழைப்பும் விடுத்தார். அது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்தார்.
இருந்த போதிலும் அப்பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தி அற்ப அரசியல் இலாபம் தேடிட பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட ஒரிரு கட்சிகள் முயற்சி செய்தன. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான வேலைத்திட்டங்களை அவர் முன்னுரிமை அடிப்படையில் முன்னெடுக்கத் தவறவில்லை. அவ்வேலைத்திட்டங்கள் குறுகிய காலப்பகுதிக்குள் பிரதிபலன்களை அளிக்கத் தொடங்கின. வரிசையுகம் கட்டம் கட்டமாகவும் விரைவாகவும் முடிவுக்கு வந்தது. வீதிப்போக்குவரத்து சேவையும் குறுகிய காலப்பகுதிக்குள் வழமைக்கு திரும்பியது.
பணவீக்கம், ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி என்பன தொடராக வீழ்ச்சி அடைந்து வந்தன. இந்நிலையில் உல்லாசப் பயணிகளின் வருகை நாளுக்குநாள் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த வருடம் நாட்டுக்கு வருகை தந்த மொத்த உல்லாசப் பயணிகள் எண்ணிக்கையை இவ்வருடம் முதல் ஏழு மாதங்களுக்குள்ளேயே எட்ட முடிந்துள்ளது. இதன் பயனாக இவ்வருடம் உல்லாசப் பயணிகளின் வருகை இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அதேநேரம் உல்லாசப் பயணத்துறை மூலமான வருமானம் கடந்த ஜுலை மாதம் மாத்திரம் 219 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. ஜனாதிபதியின் தலைமையின் கீழ் பொருளாதாரம் சிறந்த முறைமையின் கீழ் முகாமைத்துவம் செய்யப்படுவதன் பயனாக வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்தும் நிலைக்கு நாடு முன்னேற்றமடைந்திருக்கின்றது.
அந்த வகையில் பங்களாதேசத்திடம் பெற்றிருந்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் முதற்கட்டமாக 50 மில்லியன் அமெரிக்க டொலரும் இரண்டாம் கட்டமாக 100 மில்லியன் அமெரிக்க டொலரும் என்றபடி திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு 3.8 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளது.
அதேநேரம் நாட்டில் 17 இலட்சம் பேருக்கு சமுர்த்தி கொடுப்பனவும், 5 இலட்சத்து 17 ஆயிரம் பேருக்கு விஷேட தேவையுடையவர்கள் மற்றும் முதியோர் கொடுப்பனவும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், 24 இலட்சம் பேருக்கு அஸ்வெசும கொடுப்பனவும் பெற்றுக் கொடுக்கப்படுகின்றது.
பொருளாதாரத்தை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்துள்ளதன் பயனாகவே நாடு இவ்வாறான முன்னேற்றங்களை அடைந்தபடி சாதகமான முன்னேற்றப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளித்து ஜனாதிபதி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள பிரதிபலன்களே இவையாகும்.
இந்த நிலையில் அற்ப அரசியல் இலாபம் தேடும் வகையில் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் சாதமான முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் நாட்டை மீண்டும் அதல பாதாளத்திற்குள் தள்ளி விடுவதற்கான நடவடிக்கையாகவே அமையும். அதனால் நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னலைப்படுத்தி செயற்பட வேண்டும். அதுவே மக்களின் விருப்பமாகும்.