Thursday, May 23, 2024
Home » மழையால் ஆசிய கிண்ண போட்டிகளை கொழும்பில் இருந்து மாற்ற ஆலோசனை

மழையால் ஆசிய கிண்ண போட்டிகளை கொழும்பில் இருந்து மாற்ற ஆலோசனை

-வேறு மைதானங்களுக்கு மாற்றுவதிலும் நடைமுறை சிக்கல்

by sachintha
September 5, 2023 10:13 am 0 comment

 

இலங்கையில் பெய்து வரும் மழை ஆசிய கிண்ணத் தொடரில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சுப்பர் போர் சுற்று போட்டிகளை கொழும்புக்கு வெளியில் நடத்துவது பற்றி ஆசிய கிரிக்கெட் கெளன்சில் ஆலோசித்து வருகிறது.

இலங்கையில் ஒப்பீட்டளவில் மழை வீழ்ச்சி குறைவாக இருக்கும் மாற்று மைதானங்களை தேடி வருவதாக இலங்கை கிரிக்கெட் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இலங்கையில் இது மழைப் பருவம் இல்லாதபோதும் கொழும்பில் கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வருவதோடு ஆர்.பிரேமதாச மைதானம் அமைந்திருக்கும் பகுதிக்கு அருகில் வெள்ள நிலையும் ஏற்பட்டது.

அத்தோடு கடந்த சனிக்கிழமை பல்லேகலவில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டதும் மைதானத்தை மாற்றுவது குறித்து ஆசிய கிரிக்கெட் கெளன்சில் மற்றும் ஒளிபரப்பாளர்களான டிஸ்னி ஸ்டார் நிறுவனத்திற்கு இடையே ஆலோசனை நடத்த காரணமாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழை பொதுவாக ஒக்டோபர் மாதத்திலேயே உருவாகும் நிலையில் செப்டெம்பர் மாதத்தில் கொழும்பில் மழை பொழிவது வழக்கமாக நிகழாத ஒன்றாகும்.

இந்த ஆசிய கிண்ணத்தின் நான்கு சுப்பர் போர் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி ஆர். பிரேமதாச மைதானத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 7 தொடக்கம் 17 ஆம் திகதி வரை நடத்த ஏற்பாடாகியுள்ளது. இங்கு 2015 தொடக்கம் செப்டெம்பர் மாதங்களில் ஐந்து டி20 சர்வதேச போட்டிகள் மற்றும் நான்கு ஒருநாள் சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த அனைத்து போட்டிகளும் பூர்த்தி செய்யப்பட்டதோடு இரண்டு போட்டிகள் மாத்திரம் மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்பட்டன.

போட்டி அமைப்பாளர்கள் இலங்கையின் வானிலை ஆய்வாளர்களுடன் எந்த அளவிற்கு ஆலோசனை நடத்தினார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனினும் வரும் வாரங்களில் கொழும்பில் எந்த மாதிரியான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகள் பேசி இருப்பதாக தெரியவருகிறது. குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி கைவிடப்பட்டதே அதிகாரிகளிடையே அவதானத்தை அதிகரிக்கக் காரணமாகியுள்ளது போட்டி கொழும்பில் இருந்து மாற்றப்பட்டாலும் மாற்று மைதானம் குறித்து பிரச்சினை நிலவுகிறது. தம்புள்ளை மாற்றாக பரிந்துரைக்கப்பட்டபோதும் அங்கு ஹோட்டல் மற்றும் தங்குமிட வசதிகள் பற்றி இந்தியா திருப்தி இன்றி இருக்கும் அதேநேரம் நீண்ட கால பிரச்சினையாக நீடிக்கும் மைதானத்தின் மின்விளக்குகளின் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தம்புள்ளை இலங்கையின் ‘உலர் வலயத்தில்’ இருப்பதோடு ஆண்டின் இந்தக் காலப்பகுதியில் கண்டி மற்றும் கொழும்பை விடவும் அங்கு குறைவான மழை வீழ்ச்சியே காணப்படுகிறது.

உலர் வலய எல்லையில் அமைந்திருக்கும் ஹம்பாந்தோட்டையும் மற்றொரு தேர்வாக உள்ளது. எனினும் மைதானம் காட்டு பகுதி ஒன்றின் விளிம்பில் அமைந்திருப்பதால் அங்கு நெருக்கமான இடத்தில் இருப்பிட வசதிகள் இல்லை. எனவே அங்கு போட்டியை மாற்றினால் ஏற்பாட்டியல் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

ஒளிபரப்பாளர்களும் எஞ்சிய போட்டிகளை இரண்டு இடங்களுக்கு பிரிப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இதனால் இரு மைதானங்களுக்கு இடையே உபகரணங்களை எடுத்துச் செல்வது அல்லது இரண்டு வெவ்வேறு இடங்களில் ஒளிபரப்பு உட்கட்டமைப்புகளை வைத்திருக்க வேண்டி ஏற்படும்.

இந்நிலையில் எஞ்சிய சில போட்டிகள் அல்லது அனைத்து போட்டிகளும் கொழும்பில் இருந்து மாற்றப்பட்டால் ஏற்கனவே தொடரின் போட்டி அட்டவணையில் மாற்றங்கள் கொண்டுவந்திருக்கும் நிலையில் மேலும் தாக்கம் செலுத்துவதாக அமையும்.

ஆசிய கிண்ணத்தை நடத்தும் நாடாக பாகிஸ்தான் இருந்தபோதும் இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்ததை அடுத்தே தொடரை இரு நாடுகளில் நடத்த வேண்டி ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT