Friday, October 4, 2024
Home » வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹரா பாதுகாக்கப்பட்டு தொடர்ச்சியாக நடத்தப்படும்

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹரா பாதுகாக்கப்பட்டு தொடர்ச்சியாக நடத்தப்படும்

- கண்டி பெரஹராவை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்கான ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

by Rizwan Segu Mohideen
August 31, 2023 8:06 pm 0 comment

– யானைகளை பாதுகாப்பதோடு, பாரம்பரிய சம்பிரதாயங்களை பாதுகாத்து முன் கொண்டு செல்ல வேண்டும்
– பெரஹராவுக்கு யானைகளை பெறுவதிலான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்

தேசத்தின் வண்ணமயமாக கலை நிகழ்வாக கருதப்படும் கண்டி தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா பண்டைய முறைமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் சிறப்பாக நிறைவு செய்யப்பட்டமையை உறுதிப்படுத்துவதற்கான ஆவணம் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேலவினால் இன்று (31) கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

ஊர்வலமாக கண்டி ஜனாதிபதி மாளிகைக்கு வருகைத் தந்த தலாதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல உட்பட நிலமேமார்களை ஜனாதிபதி வரவேற்றார்.

அதனையடுத்து தியவடன நிலமே ஜனாதிபதியிடத்தில் சம்பிரதாயபூர்வமாக ஆவணத்தை கையளித்தார். பெரஹராவில் கலந்துகொண்ட யானைகளை கெளரவிக்கும் வகையில் ‘சிந்து’ எனும் யானைக்குட்டிக்கு ஜனாதிபதியால் பழங்கள் வழங்கப்பட்டன.

அதனையடுத்து பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கமைய ஜனாதிபதியுடன் நிலமேக்கள் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

பெரஹராவில் பங்குபற்றிய கலைஞர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. “எசல பெரஹெர பாரய” நிதி அன்பளிப்பு பிட்டிசர விகாரைக்கு ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய மாகாண கலாசார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட ‘பூஜனிய தலதா சங்ஸ்குருத்திய’ (போற்றத்தக்க தலதா கலாசாரம்) என்று நூலும் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

பெரஹராவை ஏற்பாடு செய்திருந்த தியவதன நிலமே உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மத மற்றும் தேசிய நிகழ்வாக மாத்திரமின்றி இலங்கையின் கலாசாரத்தை உலகறியச் செய்யும் வண்ணமயமான கலாசார கலை நிகழ்வான வரலாற்று சிறப்புமிக்க கண்டி எசல பெரஹராவை பாதுகாத்து தொடர்ச்சியாக நடத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

யானைகளை பாதுகாக்க வேண்டிய அதேநேரம், எமது பாரம்பரிய சம்பிரதாயங்களை பாதுகாத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பெரஹராவுக்கான யானைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அடுத்த வருடத்தில் சுற்றுலாத்துறையில் முன்னேற்றத்தை அடைந்துகொள்வதற்கான வேலைத்திட்டத்தில் கண்டி வரலாற்று சிறப்புமிக்க எசல பெரஹரா முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில், மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்தே, திலும் அமுனுகம, பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்‌ஷ, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏபக்கநாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன மற்றும் அரசாங்க அதிகாரிகள், முப்படை பிரதானிகள், தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல, ஏனைய நிலமேமார்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x