Meningococcal எனப்படும் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதை கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சந்தன கஜநாயக்க உறுதிப்படுத்தினார்.
ஜா – எல பகுதியை சேர்ந்த 48 வயதான குறித்த நோயாளி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
இவர் இரத்மலானையில் உள்ள நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருவதாகவும், அவருடன் தொடர்புகளை பேணியவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தேவையான நோயெதிர்ப்பு மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
அண்மையில், காலி சிறைச்சாலையில் பதிவான இந்நோயினால் இரு கைதிகள் உயிரிழந்ததுடன், மேலும் சில கைதிகள் நோய் நிலைமையுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
எவ்வாறாயினும், தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளியும் காலி சிறைச்சாலையில் பதிவான நோயாளிகளுக்கும் இடையில் எவ்வித சம்பந்தமும் இல்லையென சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் டொக்டர் G.விஜேசூரிய தெரிவித்தார்.
இதனிடையே, இது தொடர்பில் கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர், தொழிற்சங்க கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.