மன்னார், உயிலங்குளம் பகுதியில் 3.394 கி.கி. ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (29) மாலை மன்னார் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, உயிலங்குளம் பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் தெரு மதிப்பு ரூ. 3 கோடிக்கும் அதிகமென தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மன்னார், பனங்கட்டிக்குட்டு பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஒருவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் மன்னாரிலிருந்து வவுனியா செல்லும் தனியார் பஸ் ஒன்றில் பயணித்த நிலையில், குறித்த பஸ்ஸை திடீர் சோதனைக்குட்படுத்திய விசேட அதிரடிப்படையினர், குறித்த சந்தேகநபரிடமிருந்து மேற்படி ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
சந்தேகநபர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பில், அவர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.