– நிறுவனங்களின் பட்டியல், எதிரான நடவடிக்கை அறிக்கை ஓகஸ்ட் 31 இல்
நாடு முழுவதிலும் நடத்திய சுற்றிவளைப்புக்களில் போலியான ஸ்டிக்கர்களுடன் கூடிய சுமார் 6000 மதுபானப் போத்தல்களை இலங்கை மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் 10ஆம் திகதி நடைபெற்ற வழிவகைகள் பற்றிய குழுவில் வழங்கப்பட்ட பணிப்புரையின் பின்னர் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக தலைமையில் அண்மையில் (22) கூடிய வழிவகைகள் பற்றிய குழுவில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட மதுபானங்களை உற்பத்தி செய்த நிறுவனங்களின் பெயர் பட்டியல், அந்த மதுபானப் போத்தல்களை விற்பனை செய்த விற்பனை நிலையங்கள் மற்றும் தவறிழைத்தவர்களுக்கு எதிராக மதுவரித் திணைக்களத்தினால் எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட அறிக்கையை 31.08.2023ஆம் திகதிக்கு முன்னர் குழுவில் சமர்ப்பிக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.
போலியான ஸ்டிக்கர்களுடனான மதுபானங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்களை மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இரத்துச் செய்வதன் ஊடாக இவ்வாறான மோசடிச் செயற்பாடுகளை நிறுத்த முடியும் என்றும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
மதுவரித் திணைக்களத்தின் சில செயற்பாடுகளால் அரசாங்கத்துக்குக் கிடைக்கக் கூடிய வருமானங்கள் இழக்கப்படுவதாக இலங்கை மதுபான அனுமதிப்பத்திர உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் குழுவில் தெரிவித்தனர். இது விடயம் தொடர்பில் திணைக்களத்தினால் ஏடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அவற்றுக்கான காலக்கெடு குறித்த அறிவுறுத்தல்கள் ஏற்கனவே மதுவரித் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டிருப்பதாகக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
செயற்கையான ‘கள்’ தயாரிப்பின் ஊடாக அரசாங்கத்துக்கு ஏற்படும் வருமான இழப்புத் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. இயற்கை கள்ளையும் செயற்கைக் கள்ளையும் பிரித்து அறிவதற்கான தொழில்நுட்ப வதிகள் இலங்கையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர், செயற்கைக் கள் தயாரிப்பைக் கண்டுபிடிப்பதற்காகத் திணைக்களம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையொன்றையும் 2023.08.31ஆம் திகதிக்கு முன்னர் குழுவுக்கு வழங்குமாறும் தெரிவித்தார்.
உற்பத்தி செய்யப்படும் மதுபானத்தின் அளவு மற்றும் அது தொடர்பில் செலுத்தப்பட வேண்டிய வரியின் அளவு என்பவற்றை மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் கண்காணிக்கக் கூடிய வகையில் டாஷ் போர்ட் (dash board) ஒன்றைத் தயாரிக்குமாறும், மதுவரிக் கட்டளைச் சடத்துக்கு அமைய மதுபான உற்பத்தி நிறுவனங்கள் சில்லறை விற்பனையில் ஈடுபட முடியாது என்ற போதிலும், அவ்வாறு சில்லறை விற்பனையில் ஈடுபட்டுள்ள மதுபான உற்பத்தியாளர்களின் பெயர் பட்டியலை 2023.08.31ஆம் திகதிக்கு முன்னர் குழுவிற்கு வழங்குமாறும் குழுவின் தலைவர், மதுவரித் திணைக்களத்திற்கு அறிவுறுத்தினார்.
மதுவரித் திணைக்களத்துக்குச் செலுத்த வேண்டிய நிலுவை வரிகளின் தொகையை கணக்கிடுவதற்கும், நிலுவை வரியைச் செலுத்தாத நிறுவனங்களின் அனுமதிப் பத்திரத்தை தன்னிச்சையாக இரத்துச் செய்யும் முறைமையொன்றை உருவாக்குமாறும், ஒன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் மதுபான விற்பனையைத் தற்காலிகமாக நிறுத்தி, இதனைக் கண்காணிப்பதற்கு திட்டமொன்றைத் தயாரிக்குமாறும் வழிவகைகள் பற்றிய குழு, மதுவரித் திணைக்களத்துக்குப் பரிந்துரைத்தது.
அதேநேரம், மதுபானப் போத்தல்களில் ஒட்டப்படும் பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் போலியானவையா அல்லது அசலானவையா என்பதை அறிந்துகொள்வதற்கான உரிமை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதையும் குழுவின் தலைவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இதில் இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, சிசிர ஜயகொடி, பாராளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா பண்டார, நாலக கோட்டேகொட, எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோர் கலந்துகொண்டனர்.