Tuesday, July 23, 2024
Home » காத்தான்குடியில் போதைப்பொருளுக்கு எதிராக எழுச்சிப் பிரகடனம் செய்த பல்லாயிரம் மக்கள்!

காத்தான்குடியில் போதைப்பொருளுக்கு எதிராக எழுச்சிப் பிரகடனம் செய்த பல்லாயிரம் மக்கள்!

by sachintha
August 24, 2023 1:04 pm 0 comment

காத்தான்குடியில் சில தினங்களுக்கு முன்னர் ஜும்ஆத்தொழுகையையடுத்து பெருந்திரளாக மக்கள் ஒன்றுதிரண்டு போதைக்கு எதிரான எழுச்சிப் பிரகடனம் செய்தனர்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை, காத்தான்குடி வர்த்தக சங்கம் மற்றும் ஏனைய சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் போதைக்கு எதிரான எழுச்சிப் பிரகடனம் இடம்பெற்றது.

காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயல், புதிய காத்தான்குடி அல் அக்ஸா ஜும்ஆப் பள்ளிவாயல் ஆகிய பள்ளிவாயல்களில் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் எழுச்சிப் பேரணியாக காத்தான்குடி குட்வின் சந்தி வரை சென்று அங்கு பெருந்திரளான பொதுமக்கள் ஒன்றுகூடினர்.

இதையடுத்து பொதுமக்கள் போதைக்கு எதிரான பிரகடனத்தை செய்தனர். காத்தான்குடி பள்ளிவாயல்களின் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ரஊப் ஏ மஜீத் தலைமையில் இந்த பிரகடன நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது பிரகடனத்தை சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.சபீல் நழீம் வாசிக்க, அங்கு திரண்டிருந்த மக்கள் கைகளை நீட்டி பிரகடனம் செய்தனர்.

இந்த பிரகடன நிகழ்வில் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஹாறூன் ரசாதி, செயலாளர் அன்சார் நழீமி, காத்தான்குடி நகர முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், முன்னாள் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம் மற்றும் சம்மேளன பிரமுகர்கள், பள்ளிவாயல்களின் நிருவாகிகள் உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை என்பன பாரியளவில் அதிகரித்து இருக்கின்றன. இதன் விளைவாக சமூக சீர்கேடுகளும் ஒழுக்க சீர்கேடுகளும் மாணவர்களின் நடத்தைப் பிறழ்வுகளும் குடும்ப வன்முறைகளும் மற்றும் விவாகரத்துக்களும் அதிகரித்து வருகின்றன. இதனடிப்டையில் காத்தான்குடி பிரதேச மக்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் கீழ்வரும் விடயங்களை சத்தியப் பிரகடனமாக மேற்கொள்கின்றோம்.

போதையினை ஏற்படுத்துகின்ற எந்தவொரு போதைப்பொருளையும் நானோ என்னை சார்ந்திருப்பவர்களோ குடும்ப உறுப்பினர்களோ வாங்கவோ, விற்கவோ, பாவிக்கவோ மாட்டேன்.

போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனைக்கு நானும் எனது குடும்பமும் பகிரங்கமாக எதிர்ப்பாளர்கள் என்பதோடு, அவ்வாறு விற்பவர்களையும் பாவிப்பவர்களையும் சமூகத்தின் முன்னிலையில் அம்பலப்படுத்துவது எமது தார்மீக கடமையென சத்தியம் செய்கின்றேன்.

போதைப்பொருள் வியாபாரத்தின் மூலமும் அது சார்ந்த தரகு வேலைகள் மூலமும் ஈட்டப்படும் எந்தவொரு வருமானமும் ஹறாம் ஆகும். அதன் மூலம் கிடைக்கின்ற வருமானத்தினை எனது குடும்பத்தினருக்கும் எனது பிள்ளைகளுக்கும் செலவிடுவதென்பதும் ஹறாம் ஆகும். போதைக்கு அடிமையானோர், போதைப் பொருட்களை விற்பவர்களை அடையாளப்படுத்த முன்வருவேன் எனவும் பிழையான அவர்களது உழைப்பில் இருந்து உண்ணுவதையும் பருகுவதையும் முற்றாக தவிர்ப்பேன் எனவும் சத்தியம் செய்கின்றேன். நமது பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை செய்பவவர்கள், அதனைப் பாவிப்பவர்கள், அதற்கு ஊக்கமளிப்பவர்களின் திருமணம், மரணச் சடங்குகள் ஏனைய மகிழ்ச்சி மற்றும் துக்ககரமான நிகழ்வுகள் எதிலும் நான் கலந்து கொள்ள மாட்டேன்.

சமூகத்தில் போதைவஸ்தோடு தொடர்புடைய விற்பனையாளர்கள், உதவி ஒத்தாசை வழங்குபவர்கள் சந்தேகத்திற்கு அப்பால் அடையாளம் காணப்படும் பட்சத்தில் அவர்களிடமிருந்து சமூகநலன் கருதி நிதி சேகரித்தல், பொது தேவைகளுக்கு அவர்களை நாடுதல், அவர்களால் வழங்கப்படும் அன்பளிப்புக்கள் மற்றும் நன்கொடைகள் எதனையும் நான் பெற்றுக் கொள்ள மாட்டேன்.

போதைப்பொருள் தொடர்பாக இலங்கையின் சட்டதிட்டங்களை முழுமையாக மதித்து பின்பற்றுவதுடன், அதனை மீறி செயற்படுபவர்களை சட்டத்தின் முன் கொண்டுவருவதற்கு தயாராகவுள்ளேன் என்பதோடு, சட்டத்தை அமுல்படுத்துகின்ற அதிகாரிகளுக்கு இது விடயமாக பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவேன்.

இவ்வாறு இந்த எழுச்சிப் பிரகடனம் செய்யப்பட்டது.

எம்.எஸ்.எம்.நூர்தீன்…

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT