நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் – -3 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், இன்று (புதன்கிழமை) மாலை நிலவில் தரையிறங்க உள்ளது.
நிலவின் தென்துருவப் பகுதியில் நீர் இருக்கும் விஷயத்தை சந்திரயான் – 1 கண்டுபிடித்த பின்னர், நிலவை ஆக்கிரமிப்பதற்கான போட்டி உலக நாடுகள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்தியாவும் சந்திரயான் – 2 விண்கலத்தை அனுப்பி நிலவின் தென் துருவத்தை ஆராய திட்டமிட்டது.
ஆனால், இதன் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்காமல் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் சந்திராயான் – 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -03 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து, தற்போது நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருக்கிறது. கடந்த சில நாட்களாக இதன் தூரம் குறைக்கப்பட்டு கொஞ்சம், கொஞ்சமாக நிலவுக்கு நெருக்கமாக இதை விஞ்ஞானிகள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 17 ஆம் திகதி சந்திரயான் விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இது இன்று (23) மாலை 6.04 மணிக்கு நிலவில் தரை இறங்க உள்ளது. இந்தியாவின் இந்தச் சாதனையை உலகமே வியப்புடன் நோக்குகின்றது. சந்திரயான் நிலவில் பத்திரமாகத் தரையிறங்குமானால், அதனை உலகவெற்றியாக இந்தியா கொண்டாட முடியும்.