இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் ஆராயப்பட்டது.
குறித்த குழு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் அண்மையில் (10) பாராளுமன்றத்தில் கூடிய சந்தர்ப்பத்திலேயே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
இலங்கை பொலிஸ், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகாரசபை ஆகியன இந்தக் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்ததுடன், இந்நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு இந்நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்த நாட்டில் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டார்.
அத்துடன், பாரிய அளவில் போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதைத் தடுப்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொண்ட அதிகாரிகள் குறிப்பிட்டனர். இதற்காக அண்மைய நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகளின் ஒத்துழைப்பைப் பெற்றிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
புகையிலை மற்றும் மதுபான பாவனையை குறைப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய சில ஆலோசனைகளை புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகாரசபையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்த அதிகாரிகள் குழுவில் முன்வைத்தனர். மேலும், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை செயற்பட்டு வருவதாக அதன் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இக்குழுக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் போதைப்பொருளைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்த ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்ததுடன், உறுப்பினர்களின் கருத்துக்களையும் கருத்தில் கொண்டு, வருகை தந்திருந்த நிறுவனங்களின் ஆலோசனைகளையும் உள்ளடக்கியதாக அறிக்கையொன்றைக் குழுவில் சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் அமைச்சர் டிரான் அலஸ் வலியுறுத்தினார்.
இந்தக் குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் (சட்டத்தரணி) சிசிர ஜயகொடி, பாராளுமன்ற உறுப்பினர்களான புத்திக பத்திரண, ஜயந்த சமரவீர, (வைத்திய கலாநிதி) உபுல் கலப்பதி, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, ராஜிகா விக்ரமசிங்ஹ மற்றும் மஞ்சுளா திசாநாயக ஆகியோர் கலந்துகொண்டனர்.