இரத்தினபுரி, சிறிபாகம பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றின் ஊடாக தென் மாகாணத்துடன் தேசிய மின்சார கட்டமைப்பை இணைக்கும் விநியோக பாதையின் பகுதியை, எந்தவொரு இழப்பீடும் இல்லாமல், அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்குவதற்கு காணியின் உரிமையாளர்களான இணங்கியுள்ளனர்.
இதன் மூலம், இலங்கை மின்சார சபைக்கும் குறித்த காணி உரிமையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கிற்கு தீர்வு காண இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச்சபை சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ் 2015 ஜனவரி மாதம் 25 ஆம் திகதி விசேட வர்த்தமானியில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட மின்சார பிணக்குகளை தீர்க்கும் நடைமுறைகளுக்கு இணங்க இது இந்த சமரச நடவடிக்கை இருந்தது.
விநியோக மின்கம்பியின் 630 மீற்றர் பகுதியை நிர்மாணிப்பதன் காரணமாக இழக்கும் காணிக்கு தனியார் மதிப்பீட்டாளர்கள், இழப்பீடாக 41 மில்லியன் ரூபாவை சிபாரிசு செய்திருந்தனர்.
பின்னர் ஆசிய அபிவிருத்தி நிதியத்தின் அளவுகோல்களின்படி இழப்பீடாக 9.6 மில்லியன் ரூபாவை கணக்கிட்டுள்ளனர். ஆனால் இலங்கை மின்சார சபை 1.69 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்க இணங்கியிருந்தது. இந்த பிரச்சனை தொடர்பாக ஓகஸ்ட் 08ஆம் திகதி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு முறையிடப்பட்டு 3 நாட்களுக்குள் பிரச்சினை தீர்க்கப்பட்டது.
இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள காணி உரிமையாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் பொது மக்களுக்கு எவ்வித அசௌகரியமும் இன்றி தொடர் மின்சாரம் வழங்குவதற்காக உரிய காணியை நட்டஈடு எதுவுமின்றி அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். நாட்டின் தற்போதைய மின்சார தேவையை கருத்திற்கொண்டு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இணக்க சபைக்கு முன்பாக இது தொடர்பான ஒப்பந்தத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
அதன்படி, இது தொடர்பான விநியோக கட்டமைப்பு கட்டுமானப் பணியைத் தொடங்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது. இலங்கை மின்சார சபையின் உத்தேச திட்டத்தின்படி, இந்த தனியார் காணியின் ஊடாக பொருத்தமான மின்சார கேபிள் அமைக்கப்பட வேண்டும் மற்றும் குறைந்தபட்ச உயரம் 20 மீற்றராக இருக்க வேண்டும்.
நிபந்தனை மற்றும் நேர்மை தொடர்பான விதிமுறைகளுக்கு உட்பட்டு கேபிள்களை அமைக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. இந்த ஒப்பந்தம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இலங்கை மின்சாரசபை சட்டத்தின் 39ஆவது பிரிவின் கீழ், இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது மின்சாரத் தொழிற்துறை தொடர்பான மேற்கண்ட முரண்பாடுகளை மத்தியஸ்தம் மூலம் தீர்த்து வைப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மின்சார சேவைகளை வழங்கும் உரிமம் பெற்ற நிறுவனங்கள் மற்றும் மின்சார நுகர்வோர், இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார தனியார் நிறுவனம் உள்ளிட்ட பிற தரப்பினருக்கு இடையே எழும் பிணக்குகளைத் திறமையாகத் தீர்ப்பதற்காக 2011 இல் பிணக்குத் தீர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நடைமுறைகள் 2015 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டன.
இந்த பிணக்கு தீர்வு முறையால், மின்சாரத் துறையில் முறைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகளை திறமையாக தீர்க்க முடிந்தது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நுகர்வோர் விவகாரப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரொஷான் வீரசூரிய மேற்படி விநியோகத்தை வழங்குவது தொடர்பிலான பிணக்கை தீர்க்கும் குழுவின் தலைவராகச் செயற்பட்டதுடன், சட்டத்தரணி திருமதி சி.எல்லாவல மற்றும் பொறியியலாளர் காமினி சேனாநாயக்க ஆகியோர் அனுபவம் மிக்க வெளி உறுப்பினர்களாக செயற்பட்டனர்.