Home » எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழு மேலதிக விசாரணை!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழு மேலதிக விசாரணை!

- இழப்பீட்டை மதிப்பிடும் சூழல் மதிப்பாய்வுக் குழுவுக்கு 2 வருடங்களாகியும் இது வரை கொடுப்பனவு வழங்கவில்லை

by Rizwan Segu Mohideen
August 12, 2023 10:29 am 0 comment

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் மற்றும் அது தொடர்பான இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பில் கண்டறிவதற்கு நேற்று முன்தினம் (10) பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு முன்னிலையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் அழைக்கப்பட்டிருந்தனர்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் அது தொடர்பான இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பில் இதன்போது குழுவினால் வினவப்பட்டது.

நீதி அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் இணைந்து முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரமே சிங்கப்பூர் கப்பல் உரிமையாளர்களின் சட்டப் பிரதிநிதிகள் மற்றும் காப்புறுதிப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு இந்நாட்டின் பிரதிநிதிகள் குழுவொன்று பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சட்ட மாஅதிபரின் தலைமையிலான அந்தக் குழுவில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், கரையோர செயலகத்தின் பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஒருவர், மீன்பிடி அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவர் உட்பட எட்டு பேர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் ஜூலை 18-19 ஆம் திகதிகளில் சிங்கப்பூரில் சந்தித்து உத்தேச இழப்பீட்டுத் தொகை எவ்வாறு தொகுக்கப்பட்டுள்ளது என்பது குறித்துக் கலந்துரையாடினர்.

தற்பொழுது இடைக்காலக் கோரிக்கைகள் 13 முன்வைக்கப்பட்டிருந்த போதிலும் அதில் 4 கோரிக்கைகளுக்கு மாத்திரம் நிதி கிடைத்துள்ளதால் ஏனைய இடைக்காலக் கோரிக்கைகளுக்காக நிதியை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் முன்வைக்கப்பட்ட இடைக்காலக் கோரிக்கைகள் இலக்கம் 5,6,7,8 ஆகியவற்றுக்கு மிகவும் குறுகிய காலத்தில் செலவுகளை வழங்குவதற்கும் அதற்கு மேலதிகமாக 13 வரையான இடைக்காலக் கோரிக்கைகளுக்கான செலவுகளை வழங்குவதற்கும் இந்தக் கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டது.

சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டு இறுதியாக ஊடகங்களுக்கு கூட்டாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சிங்கப்பூரில் வழக்கை தொடரும் பணிகள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுவதால், இந்தக் குழுக் கூட்டத்தில் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு கலந்துகொள்ளுமாறு அறிவித்திருந்தாலும், தற்பொழுது இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருவதால் அது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க முடியாது என அறிவிக்கப்பட்டிருந்ததால், வழக்கின் தற்போதைய நிலைமை தொடர்பில் குழுவில் தெரிவிக்கப்படவில்லை.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் நியமிக்கப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் தொடர்பான இழப்பீட்டை மதிப்பிடும் சூழல் மதிப்பாய்வுக் குழுவுக்கு இந்த ஆண்டுக்கான நியமனக் கடிதங்கள் வழங்காமை தொடர்பிலும் அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் தொடர்பில் 2 வருடங்களாகியும், இது வரை முறையாகக் கொடுப்பனவுகள் வழங்கப்படாமை தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது.

இவ்வாறான சூழல் மதிப்பீடு இதற்கு முன் செய்யப்படாததால், இது போன்ற முன்மாதிரி இல்லாமல் பணம் செலுத்துவது குறித்து தீர்மானிப்பதற்கு சில காலம் எடுத்ததாகவும் தற்பொழுது அந்தக் கொடுப்பனவுக்காக அமைச்சரவை அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால் எதிர்வரும் காலத்தில் பகுதி பகுதியாக கொடுப்பனவு வழங்க முடியுமென இதன்போது கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்தது.

அத்துடன், துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2023 ஜூலை 21 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட “எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் அனர்த்தம் மற்றும் இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ளுதல்” தொடர்பான குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகள் தொடர்பில் இதன்போது குழு கவனம் செலுத்தியதுடன், அந்த பரிந்துரைகள் தொடர்பான மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஒக்டோபர் முதலாம் வாரத்தில் கூடவுள்ள துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு நகர அபிவிருத்தி ம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளருக்கும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவருக்கும் குழு ஆலோசனை வழங்கியது.

இந்தக் கோட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான வருண லியனகே, அகில எல்லாவல, திலக் ராஜபக்ஷ, நாலக பண்டார கோட்டேகொட ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT