Thursday, July 25, 2024
Home » சுவர்க்கத்தை இழக்கச் செய்யும் தவறான பண்புகள்

சுவர்க்கத்தை இழக்கச் செய்யும் தவறான பண்புகள்

by sachintha
August 11, 2023 11:42 am 0 comment

எஜமானர்கள் அடிமைகளிடம் கனிவாகவும், அன்பாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்வதும் இறை நம்பிக்கையே. இந்த இறைநம்பிக்கை உடல் சார்ந்ததாக இருப்பதினால் எஜமானர்களின் உடல் ரீதியான எந்தத் தொந்தரவுகளும், மனித உரிமை மீறல்களும் அடிமைகளைப் பாதிப்புக்குள்ளாகி விடக்கூடாது.

அடிமைகளிடம் மோசமாக நடந்து கொள்வது இறைநம்பிக்கைக்கு எதிரானது. இறைநம்பிக்கைக்கு எதிரான எந்தவொரு செயலும் இறை நம்பிக்கையாளரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இது குறித்த எச்சரிக்கையை நபி (ஸல்) அவர்கள் கடின வார்த்தைகளால் எடுத்தியம்பியுள்ளார்கள். ‘கஞ்சனும், மகா மோசடிக்காரனும், தன் அடிமைகளை மோசமாக நடத்துகின்ற உரிமையாளனும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: அஹ்மது).

அடிமைகளை மோசமாக நடத்துகின்ற உரிமையாளர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, ஒருவர் ‘இறைவனின் தூதரே, இச்சமுதாயம் அடிமைகளும், அநாதைகளும் நிறைந்த சமுதாயம் என்று எங்களிடம் கூறினீர்களே?’ என்று கேட்டார். ‘ஆம், அவர்களை உங்களின் பிள்ளைகளைப் போன்று கண்ணியப்படுத்துங்கள். நீங்கள் உண்பதிலிருந்து அவர்களுக்கும் உண்ணக்கொடுங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: அஹ்மது)

‘நான் அபூதர் (ரலி) அவர்களை (மதீனாவிற்கு அருகிலுள்ள) ‘ரபதா’ என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும், அவ்வாறே அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் இருப்பதைப் பார்த்தேன். நான் ஆச்சரியப்பட்டு அதைப்பற்றி அவரிடம் கேட்டதற்கு, நான் ஒரு தடவை ஒரு மனிதரை (எனது அடிமையை) ஏசிவிட்டு, அவரின் தாயையும் குறை கூறிவிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அபூதர், அவரையும், தாயையும் சேர்த்து குறை கூறி விட்டீரே. நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர். உங்களது அடிமைகள் உங்களின் சகோதரர்கள் ஆவர். இறைவன் தான் அவர்களை உங்களின் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால், அவர் தாம் உண்பதிலிருந்தே அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்தே அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால், நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்’ என கூறினார்கள். ‘இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்’ என அபூதர் (ரழி) கூறினார். (ஆதாரம்: புஹாரி)

எஜமானரின் கனிவான நடத்தையையும், அடிமைகளின் உரிமைகளையும் இந்த நபிமொழி அழகாக போதிக்கிறது. அடிமையை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், கேட்பதற்கு ஆள் கிடையாது என நினைத்து எஜமான் வரம்பு மீறி நடக்கலாகாது. நாளை மறுமையில் இதை தட்டி கேட்பதற்கு இறைவன் இருக்கிறான். அடிமைகளின் உரிமை விஷயத்தில் இறைவனை அஞ்சி நடக்க வேண்டும். அத்தோடு அடிமைகளும் எஜமானர்களிடம் நன்மதிப்புடன் நடந்து கொள்ளவும் தவறலாகாது. அப்போது ஈடு இணையில்லாத நற்கூலியை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்ளலாம்.

அபூமதீஹா…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT