அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் (IUSF) கொழும்பில் இன்று (10) ஏற்பாடு செய்யப்படுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதிமன்றால் உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் விதாரண மதுஷான் சந்திரஜித், அதன் பிக்கு ஒன்றிய அழைப்பாளர் சிறிதம்ம தேரர் உள்ளிட்டட 10 பேர் மற்றும் அவர்களுடன் பங்குபற்றுவோருக்கு இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்று (10) மு.ப. 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையான காலப் பகுதியில் கொழும்பு, கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜனாதிபதி செயலகம், இலங்கை மத்திய வங்கி, ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சு, காலிமுகத்திடல் சுற்றுவட்டம் உள்ளிட்ட இடங்களுக்குள் பிரவேசிக்க தடை விதித்து, கோட்டை நீதவான் திலிண கமகே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்க முடியும் எனவும், ஆயினும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காதிருக்குமாறும், பொதுமக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் வகையிலான அடாவடித்தனமான செயல்களில் ஈடுபட வேண்டாமெ குறித்த நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் காரணமாக பொதுமக்களிடையே அமைதியின்மை மற்றும் அசௌகரியம் ஏற்படலாம் எனத் தெரிவித்து, பொலிஸார் விடுத்த வேண்டுகோளை கருத்தில் கொண்ட நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியுள்ளது.
அதற்கமைய, இவ்வுத்தரவை மீறுவது இலங்கை தண்டனைக் கோவைச் சட்டத்தின் கீழ், தண்டனைக்குரிய குற்றம் என, குறித்த கட்டளையில் தெரிவிக்கப்பட்டுள்ளததால், அவ்வாறானோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Media on 2023.08.10 at 1105