வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று வாள் வீசி அட்டகாசம் செய்துள்ளதுடன், அதனை தடுக்க சென்ற புலனாய்வு துறை உத்தியோகத்தர் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று (09) மாலை வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் விளையாட்டு மைதானம் முன்பாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தின் முன் வீதியில் நின்ற சில இளைஞர்கள் மீது மோட்டர் சைக்கிளில் வாள்களுடன் வந்த சிலர் வாள் வீசி தாக்குதல் மேற்கொள்ள முற்பட்டதுடன், சிறிது நேரம் அப்பகுதியில் வாள்களுடன் நின்று அட்டகாசம் செய்துள்ளனர்.
இதனால் அவ்வீதியில் பயணித்த தனியார் கல்வி நிலையங்களுக்கு சென்று வந்த மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலரும் வீதியோரத்தில் அச்சத்தில் நின்றுள்ளனர். இதன்போது அப்பகுதிக்கு வந்த புலனாய்வுத்துறை உத்தியோகத்தர் ஒருவர் குறித்த இளைஞர்களை கட்டுப்படுத்த முயன்றுள்ளார். அவர் தான் புலனாய்வுத்துறை என்பதை உறுதிப்படுத்திய போதும் அவர் மீது வாள் வீசி தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளனர்.
குறித்த இடத்திற்கு பொலிஸார் வருகை தந்த போது வாள்களுடன் நின்றவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா விசேட நிருபர்