Monday, July 22, 2024
Home » உக்ரைன் – ரஷ்ய சமாதான பேச்சுவார்த்தைக்காக 42 நாடுகளை ஒன்றிணைத்து சவூதி அரேபியா வெற்றி

உக்ரைன் – ரஷ்ய சமாதான பேச்சுவார்த்தைக்காக 42 நாடுகளை ஒன்றிணைத்து சவூதி அரேபியா வெற்றி

by Rizwan Segu Mohideen
August 9, 2023 12:48 pm 0 comment

அமெரிக்கா, சீனா, இந்தியா, உக்ரைன் உள்ளிட்ட 42 நாடுகளின் உயர் அதிகாரிகளை சவூதி அரேபியா, ஜித்தாவில் சந்தித்துள்ளது. சமாதானத் தீர்வுக்கான சர்வதேச ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்காகவே கடந்த சனிக்கிழமை சவூதி அரேபியா இம்முயற்சியை ஆரம்பித்தது.

உக்ரேன் மற்றும் மேற்கத்திய ஆதரவாளர்களும் ரஷ்ய_ உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இப்பேச்சுவார்த்தைகள் சர்வதேச ஆதரவைத் திரட்டும் ஒரு முயற்சியாக அமையுமென்பது உக்ரேனின் நம்பிக்கையாகும். உக்ரேன்_ -ரஷ்ய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் வல்லரசு நாடுகள் நடுநிலை வகிக்கின்றன. சவூதி மேற்கொண்ட முயற்சிகளையடுத்து கடந்த சனிக்கிழமை ஜித்தாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் அந்த நாடுகள் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பரந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இப்போரின் மூலம் உலகளாவிய ரீதியில் ஏற்படும் தாக்கத்தை மையமாகக் கொண்டு ஒரு பணிக்குழுவை உருவாக்க ஜித்தா பேச்சுவார்த்தையில் உடன்பாடு காணப்பட்டது. கடந்த ஜூன் மாதம் டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில் நடந்த ஆரம்பப் பேச்சுவார்த்தைகளுக்கு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெருமளவு கிட்டவில்லை. அப்பேச்சுவார்த்தையில் பல நாடுகள் கலந்து கொள்ளவுமில்லை. ஆனால் சவூதி அரேபியா மேற்கொண்ட முயற்சியைத் தொடர்ந்து இந்தியா, சீனா போன்ற நாடுகள் அடுத்தடுத்த வாரங்களில் இப்பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்கு இணக்கம் தெரிவித்தன.

பேச்சுவார்த்தையின் போது போர் நிறுத்தம் மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கான 12 அம்சத் திட்டத்தை சீனா முன்வைத்தது. ரியாத்தும் பெய்ஜிங்கும் நெருங்கிய உறவைப் பேணுகின்றன. கூட்டத்தை நடத்த சவூதி அரேபியாவை தேர்ந்தெடுப்பதன் மூலம் சீனாவைப் பங்கேற்க வைக்க முடியும் என்று மேற்கத்திய இராஜதந்திரிகள் தெரிவிக்கின்றனர். சவூதி அரேபியா உக்ரேன் மீதான இராஜதந்திரத்தில் ஒரு பெரிய பங்கை வகிக்க முயற்சிக்கிறது.

“சவூதி ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் இராஜதந்திர ஈடுபாட்டுக்கும் நிறைய வரவேற்புகளும் பாராட்டுகளும் கிடைத்துள்ளன” என்று அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. ஜித்தாவில், உக்ரேன் மற்றும் முக்கிய நடுநிலை நாடுகள் ஒருமித்த கருத்துக்கு அதிக ஆர்வம் காட்டுகின்றன. ஒரு மூத்த ஐரோப்பிய அதிகாரி கூறும்போது, உக்ரேன் தனது அமைதித் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அழுத்தம் கொடுக்கவில்லை என்றும், கியேவ் (உக்ரைனின் தலைநகர்) அதை கைவிட வேண்டும் என்று மற்ற நாடுகள் வலியுறுத்தவுமில்லை என்றும் கூறினார்.

ரஷ்யப் படைகளை திரும்பப் பெற வேண்டும் என்ற உக்ரைனின் கோரிக்கையில் எந்தப்பிரச்சினையும் இல்லை எனவும் பேசப்பட்டது.பெய்ஜிங் பொதுவாக ஆக்கபூர்வமான பங்கைக் கொண்டிருந்ததாகக் கூறியதுடன், ரஷ்யாவின் மிக முக்கியமான வெளி நட்பு நாடான சீனா, பேச்சுக்களின் பின்னணியில் வேகத்தை அதிகரிப்பதற்கும், ரஷ்யாவின் சில விவாதங்களுக்கு ஊட்டமளிப்பதற்கும் ஒரு வழியை வழங்குவதற்கு முக்கியமானதாகக் கருதப்படுவதாகவும் இராஜதந்திரிகள் தெரிவித்தனர்

உக்ரேன் அமைதித் திட்டத்தில் எழுப்பப்பட்ட குறிப்பிட்ட விவகாரங்களில் ஒன்றாக பணிக்குழுக்களின் தொகுப்பை முன்மொழிய சவூதி அரேபியா திட்டமிட்டுள்ளது. அவற்றில் போரின் உலகளாவிய தாக்கம், அதன் அணுசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல் தாக்கங்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவை அடங்கும். சவூதி அரேபியாவின் இம்முயற்சிகள் தொடர்ந்தும் வெற்றியளிக்கும் பட்சத்தில் உலக சமாதானத்துக்கும் சுபிட்சத்துக்கும் மிகப்பெரும் எடுத்துக்காட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்ல.

அஷ்ஷெய்க் பௌதுல் அலவி (மதனி)
செயலாளர், தாருள் இமான் நிறுவனம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT