Wednesday, October 9, 2024
Home » சீனக்குடாவில் விபத்துக்குள்ளான பயிற்சி விமானம்; இரு விமானப்படை அதிகாரிகள் பலி

சீனக்குடாவில் விபத்துக்குள்ளான பயிற்சி விமானம்; இரு விமானப்படை அதிகாரிகள் பலி

- விபத்து தொடர்பில் விசேட விசாரணைக் குழு

by Rizwan Segu Mohideen
August 7, 2023 12:52 pm 0 comment

திருகோணமலை, சீனக்குடா விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்த PT6 ரக விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கிய நிலையில் அதில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இலங்கை விமானப்படையின் சீனக்குடா விஞ்ஞானப் பிரிவு கல்லூரியில் அமைந்துள்ள இலக்கம் 01 விமானப் பயிற்சிப் பிரிவின் விமானிகளுக்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்தப்படும் PT 6 ரக விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக, விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (07) மு.ப. 11.27 மணியளவில் குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விமானத்தில் பயணித்த இரண்டு அதிகாரிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணையை நடத்த விசேட விசாரணைக் குழுவை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ நியமித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த விமானத்தில் பயணித்த விமானத்தின் பைலட்டாக இருந்த விங் கமாண்டர் தரிந்து ஹேரத் மற்றும் விமானப் பொறியியலாளர் பெஷான் வர்ணசூரிய ஆகிய இருவரும் இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் தரிந்து ஹேரத், குருணாகல் மலியதேவ மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். 2006 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையில் விமானியாக இணைந்து கொண்ட இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

விமான அதிகாரி பெஷான் வர்ணசூரிய, குருணாகல் புனித அன்னா கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன், 2017 ஆம் ஆண்டு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்ட பின்னர் இலங்கை விமானப்படையில் விமான பொறியாளராக இணைந்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x