Monday, July 22, 2024
Home » திட்டமிடலின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி நிற்கும் ஹிஜ்ரத்

திட்டமிடலின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி நிற்கும் ஹிஜ்ரத்

by sachintha
July 28, 2023 11:53 am 0 comment

 

இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பின்னர் இரண்டாவதாக ஆட்சிக்கு வந்த கலீபா உமர் (ரழி) அவர்களுடைய காலத்தில் உலகின் மூன்றிலிரண்டு பகுதிக்கு இஸ்லாம் பரவியிருந்தது. இந்நிலையில் உலகின் எந்தப் பாகத்துடனும் தொடர்புகளைப் பேணும் வகையில் ஒரு கலண்டரை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை கலீபா உமர் (ரலி) அவர்கள் உணர்ந்தார். இந்நிலையில் நபிகளாரின் பிறப்பையோ, நபித்துவத்தையோ, இறப்பையோ அன்றி நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஹிஜ்ரத் பயணத்தை முற்படுத்தி வருடக் கணக்கை ஹிஜ்ரியில் ஆரம்பித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறைத்தூதை ஏற்றுக்கொண்டவர்கள் அனைவருடனும் மக்காவை விட்டு வெளியேறி மதீனாவுக்கு இடம் பெயர்ந்ததே ஹிஜ்ரத் ஆகும். நபிகளார் கொண்டு வந்த தூதை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் அதற்கு ஒரு சமூகக் கட்டமைப்பு அவசியமாக இருந்தது. அதற்கு மக்காவாசிகளின் அப்போதைய நிலை இடம் கொடுக்கவில்லை. நபிகளார் மக்காவில் இருந்து இடம் பெயர்வது என எடுத்த கடினமான தீர்மானத்தின் பின்னர் மதீனாவில் இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பு சிறந்த முறையில் உருவாக்கப்பட்டு வளர்ச்சி கண்டது. இதிலிருந்து இன்று வரையும் முழு உலகிலும் இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பு பரவி இருப்பதற்கு இந்த ஹிஜ்ரத்தே காரணமாக அமைந்தது.

எனவே மாற்றமொன்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய ஹிஜ்ரி வருடம் நம் ஒவ்வொருவரிலும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். ஒரு முஸ்லிமுடைய இரண்டு நாட்கள் சமமாக இருக்க மாட்டாது என்ற நபிகளாரின் பொன்மொழிக்கொப்ப, கடந்த வருடத்தை விட இந்த வருடம் சிறப்பானதாக அமைய வேண்டும். அதற்காக கடந்த வருடத்தில் தான் விட்ட தவறுகளை ஒருமுறை முஹாஸபா செய்து பார்க்க வேண்டும். அத்தோடு இவ்வருடத்தில் கடந்த வருடத்தின் தவறுகளை திருத்திக் கொண்டு எவ்வாறு முன்னேறுவது என்பது தொடர்பில் திட்டமிட வேண்டும். ‘ஒரு சமுதாயம் தனக்குள் இருப்பவற்றை மாற்றிக் கொள்ளாதவரையிலும் அல்லாஹ்தஆலா அந்த சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த மாட்டான்’.

(அல் குர்ஆன் 13:11)

ஹிஜ்ரத்தின் ஒட்டுமொத்த நிகழ்வுமே திட்டமிடலின் அடிப்படையில் நிகழ்ந்ததாகும். படுக்கையில் சிறுவர் அலி (ரழி) அவர்களைக் கிடத்தி விட்டுச் செல்வது முதல், பயணப் பாதை, தங்குமிடங்கள், தங்குமிடத்தில் உணவுக்கான ஏற்பாடுகள், யாருடன் பயணிப்பது எனப் பல விடயங்களையும் இறைதூதர் (ஸல்) அவர்கள் ஆரம்பத்திலேயே திட்டமிட்டிருந்தார்கள்.

ஏனைய பல திட்டமிடல்கள் இருந்த போதிலும் ஒரு தனி மனிதன் தன்னிடம் இருப்பவற்றில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களைத் திட்டமிடுவதற்காக ஹிஜ்ரி வருடத்தின் முதலாம் மாதத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முஸ்லிமின் அடிப்படைக் கடமைகளில் முக்கியமானது ஐங்காலத் தொழுகையாகும். தொழுகையில் மிகவும் சிறப்பானது அவ்வல் ஜமாஅத்துடன் முதல் ஸப்பில் தொழுவதாகும். வழமையாக பள்ளிக்குச் சென்று தொழுபவர்கள் அவ்வல் ஜமாஅத்தைப் பெற்றுக் கொள்வதற்காக திட்டமிட முடியும். வழமையாக பள்ளிக்குச் சென்று தொழுபவர்கள் ஜமாஅத் தொழுகைக்காக முயற்சிக்க முடியும். பள்ளிவாசலல்லாத இடங்களில் தொழுபவர்கள் தமது தொழுகைகளில் அதிகமானவற்றை பள்ளிவாசலை நோக்கி நகர்த்த முயற்சிக்கலாம். அத்துடன் நபிலான தொழுகைகளில் படிப்படியாக அதிகரிப்பை ஏற்படுத்திக் கொள்வதை திட்டமிட்டுச் செயற்படுத்தலாம். குறிப்பாக முஅக்கதாவான 12 ரக்அத்துகளையும் படிப்படியாக வழமைக்குக் கொண்டு வர முடியும். தஹஜ்ஜுத் தொழுகையை நாளாந்தம் தொழுவதற்காகவும் அப்படித் தொழக்கூடிய ஒருவர் அதனுடைய நேரத்தை அதிகரிப்பதற்காகவும் முயற்சிக்கலாம். ஜும்ஆத் தொழுகையைப் பொறுத்தவரையில் எவ்வளவு நேரகாலத்துடன் அதற்காக ஆஜராக முடியுமோ அந்தளவு வரை முயற்சிப்பதற்கு திட்டமிட முடியும்.

இஸ்லாத்தின் இரண்டாவது கடமையான தொழுகையை சிறப்பாக நிறைவேற்றுவது என்பதே சிறந்த திட்டமிடலின் வெளிப்பாடாக அமையலாம். அவ்வல் ஜமாஅத்துக்காக முயற்சிப்பவர்கள் அதான் சொன்னவுடன் பள்ளிவாசலுக்கு வர வேண்டியிருக்கிறது. அதற்காக அவர்கள் தமது அலுவல்களையெல்லாம் குறித்த தொழுகை நேரத்தை வைத்து ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. தொழுகைக்கு ஆயத்தமானவராக தன்னை எப்போதும் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதிகாலையில் எழுந்திருக்கவும் அதற்காக நேரத்துக்குத் தூங்கவும் வேண்டியிருக்கிறது. இவ்வாறான பல திட்டமிடல்கள் தொழுகை என்ற விடயத்தில் தேவைப்படுகிறது.

அடுத்ததாக ஒன்பதாவது மாதமான ரமழானுடைய காலத்தை இந்த ஹிஜ்ரி வருடத்தின் ஆரம்பத்தில் இருந்தே திட்டமிட்டுக்கொள்ள முடியும். கடந்த ஹிஜ்ரி வருடத்தில் ரமழானை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வதில் தன்னால் முடியாமல் போன விடயங்களை இந்த ரமழானில் நடைமுறைப்படுத்துவதற்காக இப்போதே திட்டமுடியும். கியாமுல் லைல் தொழுகை நேரத்தை அதிகரிப்பது, எத்தனை முறை முழுக் குர்ஆனையும் ஓதி முடிப்பது, எத்தனை சூறாக்களை மனனமிடுவது, எத்தனை பேரை நோன்பு துறக்கச் செய்வது, ஸதகாக்களை அதிகரிப்பது என்பதில் இருந்து இறுதிப் பத்தில் இஃதிகாப் இருப்பது, அதற்காக மஸ்ஜிதுல் ஹரமுக்குச் செல்வது எனப் பல விடயங்களை நோன்பு காலத்தைப் பொறுத்தவரையில் திட்டமிடலாம்.

அதேபோல வசதி படைத்தவர்கள் தமது ஸகாத்தைப் பற்றித் திட்டமிடுவதோடு ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கும் ஹாஜத் வைக்க முடியும். இதனுடன் சேர்ந்து இதற்காக எப்படி வருமானமீட்டுவது, தனது தொழில் முயற்சிகளில் இதற்காக என்ன அபிவிருத்திகளை மேற்கொள்வது, தனது கடன்களில் இருந்து எப்படி மீள்வது எனப் பல திட்டமிடல்கள் இணைந்திருக்கின்றன.

மனிதனுடைய இறுதி இலக்கு மீண்டும் அல்லாஹ்விடமே மீண்டு செல்வதாகும். இதற்காக தான் செய்ய வேண்டிய விடயங்கள் என்ன, தவிர்ந்து கொள்ள வேண்டிய விடயங்கள் என்ன என்பதையெல்லாம் இந்த ஹிஜ்ரி வருடத்தின் ஆரம்பத்தில் திட்டமிட்டுக்கொள்ள முடியும். தன்னை அல்லாஹ்வை விட்டும் தூரமாக்குகின்ற விடயங்களில் இந்த வருடம் என்னென்ன விடயங்களை முற்றாக ஒழிப்பது என்பதையும் திட்டமிடலாம்.

அதேபோல உங்களையும் உங்களது குடும்பத்தாரையும் நரக நெருப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று அல்லாஹுத்தஆலா ஏவியதற்கேற்ப தனது குடும்பத்தில் வர வேண்டிய மாற்றங்களையும் இந்த வருடத்துக்காக திட்டமிடலாம். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சமூகத்தைப் பொறுத்தவரையிலும் தேசத்தைப் பொறுத்தவரையிலுமான தனிப்பட்ட பணிகள் இருக்கின்றன. இவற்றில் எதையெல்லாம் எந்தளவு நிறைவேற்றப் போகிறேன் என்ற திட்டமிடலும் இங்கு முக்கியமானது.

எனவே திட்டமிடலுக்கும் மாற்றத்துக்கும் அடிப்படையாக அமைந்த இந்த ஹிஜ்ரி வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து திட்டமிட்டுச் செயற்பட்டு வெற்றிபெற்ற அல்லாஹ்வின் நல்லடியானாக மாறுவதற்கு முயற்சி செய்வோம்.

பியாஸ் முஹம்மத்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT