நாட்டில் தற்பொழுது பயன்பாட்டில் உள்ள RAMIS மென்பொருள் கட்டமைப்பை சிங்கப்பூர் நிறுவனத்திடமிருந்து உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் குறித்து வழி வகைகள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க தலைமையில் அண்மையில் கூடிய வழிவகைகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் கலந்துரையாடப்பட்டது.
அண்மையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வழிவகைகள் பற்றிய குழு RAMIS அமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடியிருந்தது. இது தொடர்பில் மேலும் கலந்துரையாடும் நோக்கில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
RAMIS அமைப்புத் தொடர்பில் செயற்படும் சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைய எதிர்வரும் ஜனவரி மாதத்துடன் குறித்த அமைப்பை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற விடயம் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இதற்குத் தேவையான மனித வளம் உள்ளிட்ட உள்ளக விடயங்கள் திணைக்களத்திற்குள் உருவாக்கப்படாமை இங்கு தெரியவந்ததுடன், இது தொடர்பில் அறிக்கையொன்றைக் குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு அதன் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் விடுத்தார். மேலும், RAMIS அமைப்பை ஏற்றுக்கொள்வது மற்றும் அதனை மேம்படுத்துவதற்கான கட்டமைக்கப்பட்ட முன்மொழிவை இந்த அறிக்கை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எட்டு வருடங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட RAMIS அமைப்பை இன்னமும் முழுமையாக செயற்படுத்தப்பட முடியாமல் இருப்பது தொடர்பில் குழு உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டனர்.
அதேநேரம், 13 அரசாங்க நிறுவனங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்படவுள்ள ஒருங்கிணைந்த தகவல் கட்டமைப்புக் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட 13 நிறுவனங்களுடனும் பல சுற்றுக் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டதுடன், இந்த நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் தகவல் அமைப்புகளில் தேசிய அடையாள எண்ணை பொதுவான குறியீடாக பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
இவ்வாறு ஒருங்கிணைந்த அமைப்பொன்றை உருவாக்கும்போது தனித்துவமான அடையாளமொன்றின் ஊடாக இதனை அணுகுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது பொருத்தமானதாக இருக்கும் என குழு பரிந்துரைத்தது.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, சஷீந்திர ராஜபக்ஷ, அநுராத ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயகா, டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா, இஷாக் ரஹ்மான், வசந்தயாப்பா பண்டார மற்றும் சஞ்ஜீவ எதிரிமான்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.