Thursday, July 25, 2024
Home » சர்ச்சைக்குரிய சட்டம் நிறைவேற்றம்: இஸ்ரேலில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரம்

சர்ச்சைக்குரிய சட்டம் நிறைவேற்றம்: இஸ்ரேலில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரம்

by sachintha
July 26, 2023 12:17 pm 0 comment

 

உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் சர்ச்சைக்குரிய சட்டம் இஸ்ரேலில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.

பெரும் சீர்திருத்த நடவடிக்கையாக கூறப்படும் இந்த சட்டத்தில் நியாயமற்றதாக கருதும் அரசின் செயற்பாடுகளை தடுக்க நீதிமன்றத்தால் முடியாமல்போகிறது. தீவிர வலதுசாரி அரசின் இந்த சீர்திருத்தம் இஸ்ரேலிய ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஜெரூசலம் மற்றும் டெல் அவிவில் நெடுஞ்சாலைகளை முடக்கிய ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் தண்ணீரை பீச்சியடித்தனர்.

இந்த நீதி சீர்திருத்தத்திற்கு எதிராக கடந்த சில மாதங்களால் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இந்த சட்டமூலம் இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் முக்கிய வெற்றியாக இருந்தது.

எனினும் இது தொடர்பான போராட்டம் இன்னும் முடிந்ததாக இல்லை. அரசியல் கண்காணிப்பு குழு ஒன்று மற்றும் மைய எதிர்க்கட்சி தலைவர் யயிர் லபிட் இந்த புதிய சட்டத்தை ரத்துச் செய்யக் கோரி உச்ச நீதிமன்றம் செல்ல திட்டமிட்டுள்ளார்.

மறுபுறம் இஸ்ரேலின் தொழிற்சங்க கூட்டமைப்பு பொது வேலை நிறுத்தத்திற்கு எச்சரிக்கை விடுத்திருப்பதோடு விமானப்படை விமானிகள் உட்பட ஆயிரக்கணக்கான மேலதிக இராணுவத்தினர் இந்த சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டால் வேலைக்கு சமுகமளிப்பதில்லை என்று எச்சரித்துள்ளனர்.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது துரதிருஷ்டவசமானது என்று இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடான அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடும் வாக்குவாதத்திற்கு பின்னர் இந்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பை எதிர்க்கட்சி புறக்கணித்த நிலையில் இந்த சட்டமூலம் 64–0 என நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT