ஒரு தாய்க்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர்.அந்த மூவரில் இரு பிள்ளைகள் நன்னடத்தையோடும் மதிப்போடும் வாழ்ந்து வந்தனர்.
ஒருவன் மட்டும் பலர் முகம் சுளிக்கும் வண்ணம் வாழ்ந்தான். அவனைப் பார்க்கும் போதெல்லாம் மற்றவர்கள் கரித்துக்கொட்டினர்.
அவனுடைய தந்தையோ “நான் தானா உன்னைப் பெற்றேன்! ” என்று சொல்லிக் கொள்வார். இவற்றால் அவனுடைய குணங்கள் மாறவில்லை. மாறாக நிலைமை மோசமானது.
ஆனால் அவனுடைய தாய் மட்டும் அவன் மேல் மிகுந்த பொறுமை கொண்டிருந்தாள். “என்ன இருந்தாலும் நான் பெற்ற மகனல்லவா” என்ற பாசப் போராட்டத்தில் பொறுமை காத்தாள். அனைவரும் அத்தாய் தன் மகனின் தவறுகளுக்கு ஆதரவாய் இருப்பதாக எண்ணினர்.ஆனால் நாளடைவில் அந்தத் தாயின் பொறுமை அம் மகனின் வாழ்க்கையையே மாற்றியது.
பொறுமை கடலினும் பெரிது என்பார்கள். பொறுமை என்பது அன்பின் மற்றொரு பரிமாணம். மன்னிப்பின், கனிவின் அடையாளம். அது அனைவராலும் கடைபிடிக்கப்பட வேண்டிய மிக உயரிய பண்பு.
கடந்த ஞாயிறு முதல் வாசகத்தில் தந்தையாம் கடவுள் பொறுமையுள்ளவர் என்பதை நாம் வாசிக்கிறோம்.
அவருடைய பொறுமைதான் இன்றும் இந்த உலகைத் தாங்குகிறது என்றால் அது மிகையாகாது.
மனிதர்களாகிய நாம் செய்கின்ற பிழைகளையெல்லாம் பொறுத்து, நம்மை மனம் மாற அழைக்கின்றார் கடவுள்.
இதைத் தெளிவாக விளக்குகிறது நற்செய்தி வாசகம். நல்ல விதைகள் விதைக்கப்பட்ட நிலத்தில் விதைகளின் மத்தியில் விழுந்தது களைகள்.
கடவுள் உலகைப் படைத்து அதை நல்லதெனக்கண்டார். ஆனால் அலகையின் சூழ்ச்சியால் பாவம் விளைந்தது. அதற்காக அவர் உடனே உலகையோ தன் படைப்புகளையோ அழித்து விடவில்லை. பொறுமை காத்தார்.
அத்தகைய கடவுளின் பிள்ளைகள் நாமும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். ஆனால் நாமோ “களைகளை பிடுங்கி எறியட்டுமா?” என்ற ஊழியர்களைப்போல பொறுமையிழந்தவர்களாய் வாழ்கிறோம்.
கடவுள் நல்லர்கள் மேலும் கெட்டவர்கள் மேலும் பொறுமை காட்டுகிறார். எதற்காக? வாழ்வு மாற்றம் பெற. ஏற்றம் பெற. அவர் நம்மீது பொறுமையோடு இருப்பது போல நாமும் பிறர் மீது பொறுமையோடு இருந்தால் எல்லோர் வாழ்வும் ஏற்றம் பெறும்.
அருட்பணி குழந்தை இயேசு பாபு