இன்று (19) அதிகாலை ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை பகுதியில் இரண்டு வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதாக, திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஸ்கெலியாவில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த டொல்பின் வகை வேன் ஒன்றும் கொட்டகலையில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற சிறிய ரக வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொட்டக்கலையில் இருந்து பயணித்த வேன் மோசமான காலநிலை காரணமாக சறுக்கி எதிர்திசையில் பயணித்த டொல்பின் ரக வேனுடன் மோதியமையே இவ்விபத்துக்கான காரணமென தெரியவருகிறது.
விபத்தையடுத்து சிறிய ரக வேன் சாரதி வேனை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
தெய்வாதீனமாக யாருக்கும் உயிர்சேதங்கள் ஏற்படவில்லையென தெரிவிக்கும் திம்புள – பத்தனை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் – எம்.கிருஸ்ணா