– மலையக சமூகத்தின் 200 வருட நிறைவையிட்டு விசேட நிகழ்வுகள்!
– புதிய நீர்க் கட்டண சூத்திரம் மற்றும் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்
மலையக மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு காணி உரிமையை வழங்குவதே நிரந்தரத் தீர்வு எனவும், இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் நிறைவடைவதனை முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் மாதத்தில் பல்வேறு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் பிரதான நிகழ்வு கொழும்பில் நடைபெறுவதோடு இதற்கு இணையாக நாட்டின் 13 மாவட்டங்களில் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பெருந்தோட்ட மக்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கும் மலையக அபிவிருத்திப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவும் 22 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அக்குழுவில் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், நாட்டின் நீர் வழங்கல் பணியின் நிலைபேறான தன்மையை உறுதிப்படுத்துவதுடன் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை தொடர்ச்சியாக வழங்குதை நோக்கமாகக் கொண்டு நீர் கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதனைத் தெரிவித்தார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபை எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும், நீர் வழங்கலின் தரத்தைப் பேணுவதற்கும் இவ்விடயத்தை மிகக் கவனமாக பரிசீலனை செய்து விரிவான கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்,
“நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக செலவில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்புச் செய்யும் மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளமை உட்பட பல்வேறு விடயங்கள் இந்நீர் கட்டண அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளன. நீர் கட்டமைப்பினை விரிவுபடுத்துவதற்குத் தேவையான மூலதனச் செலவுகள் உட்பட நீரை சுத்திகரிப்பதற்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு போன்றவை, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபை எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிகளுக்கு காரணமாக அமைந்துள்ளன.
இந்நிலைமை காரணமாக மாதாந்தம் சுமார் 2.8 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், வருடாந்த இழப்பு சுமார் 34 பில்லியன் ரூபாவாகும்.
பொருளாதார ரீதியில் கீழ் மட்ட நிலையிலுள்ளவர்களுக்கும் தோட்டக் குடியிருப்பு நீர் பாவனையாளர்களுக்குரிய நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது. மேலதிக நிதிச் சுமையை குறைத்துக்கொள்ளத் தேவையான நிவாரணங்கள் தொடர்ச்சியாக வழங்கப்படும்.
முன்மொழியப்பட்டுள்ள கட்டண அதிகரிப்பை மேற்கொள்ளுமிடத்து மிக குறைந்தளவு நீரைப் பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், (மாதாந்த நீர்ப் பட்டியல் 1,000 ரூபாவைவிட குறைவானதாக காணப்படும் – ஒரு நாளைக்கு 33 ரூபா மாத்திரம்) அத்தியாவசியமான சமூக சேவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும்.
மக்கள் முகம்கொடுத்துள்ள கஷ்டங்களை ஏற்றுக்கொள்வதுடன், இந்தக் கட்டண அதிகரிப்புக் காரணமாக எதிர்கொள்ளவேண்டி ஏற்படும் சவால்கள் சம்பந்தமாக கவனம் செலுத்தி, எமது அபிவிருத்தி சார்ந்த பங்குதாரர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளப்படும் இணக்கத்தின் அடிப்படையில் புதிய நீர்க் கட்டண சூத்திரம் மற்றும் கொள்கை ஒன்றினை அறிமுகப்படுத்தி எதிர்வரும் மாதங்களில் நீர் கட்டணத்தை மீளாய்வுக்கு உட்படுத்தவுள்ளோம்.
மலையக மக்கள் இந்நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். அந்த மக்கள் ஏனைய சமூகத்தைப் போலவே கௌவரமாக வாழ்கின்றனர். எனினும், மலையகத்தின் குறைகளை மட்டும் சுட்டிக்காட்டி, அந்த மக்களையும், அந்த சமூகத்தையும் மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நடத்துவது நிறுத்தப்பட வேண்டும்.
மலையக மக்கள் எதிர்கொள்ளும் வீட்டுப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண காணி உரிமை வழங்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன .”