டெஸ்லா நிறுவனத் தலைவர் இலோன் மஸ்க் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கான XAI என்ற புதிய நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
அதில் ஓப்பன்ஏஐ, கூகுல், டீப்மைண்ட், டெஸ்லா, டொரோண்டோ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முன்னாள் ஆய்வாளர்கள் பணியாற்றுகின்றனர்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அபாயங்கள் குறித்து மஸ்க் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். அது மிகப் பெரிய அச்சுறுத்தல் என்றும் அதிவேகமாக இயங்குதல் என்பது துர்தேவதைகளுக்கு அழைப்பு விடுப்பதற்குச் சமம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
‘CHAT GPT’யை உருவாக்கிய ஓப்பன்ஏஐ மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு போட்டியாகவே மஸ்கின் இந்த புதிய நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் மஸ்க்கின் மற்ற நிறுவனங்களில் இருந்து தனிப்பட்டமுறையில் இயங்கும் என்றும் ஆனால் அது உருவாக்கும் தொழில்நுட்பத்தை ட்விட்டர் உள்ளிட்ட மஸ்க்கின் மற்ற நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளும் என்றும் கூறப்பட்டது.
இந்தப் பிரபஞ்சத்தின் இயல்பைப் புரிந்துகொள்வதே எக்ஸ்ஏஐ நிறுவனத்தின் இலக்கு என்று எக்ஸ்ஏஐ நிறுவன இணையத்தளம் குறிப்பிடுகிறது.
உண்மையைப் புரிந்துகொள்வதும் வாழ்க்கையின் மிகப் பெரிய கேள்விகளுக்கு விடையளிப்பதும் தமது புதிய நிறுவனத்தின் இலக்குகள் என்று மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.