ஜா – எல பகுதியில் 56 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராகவிருந்த வலம்புரி சங்குடன் இரு பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜா- எல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக 14 அங்குல நீளம் கொண்ட பழுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் அமைந்த வலம்புரி சங்கினையே விற்க முற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் சந்தேகநபர்கள் பயணித்த கெப் வாகனம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிந்திவெல, நிட்டம்புவ, அங்கொட, மாளிகாகந்தை பகுதிகளைச் சேர்ந்த 6 நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களை வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.