கொழும்பை சுற்றிவளைப்போரை இனி பொதுமக்களே விரட்டியடிப்பர்

- இராணுவமோ, பொலிஸாரோ தேவையில்லை

கொழும்பை நாளைய தினம் சுற்றிவளைக்கப்போவதாக சில தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். அவர்களை விரட்டியடிப்பதற்கு பொலிஸாரோ, இராணுவத்தினரோ அவசியமில்லை. பொதுமக்களே அவர்களை விரட்டியடிப்பார்களென முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சிவில் விமான சேவை சட்டத்தின் கீழ், ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நாட்டு மக்கள் எப்போதும் கஷ்டத்திலேயே வாழ வேண்டும். எரிபொருள், சமையல் எரிவாயு, பால்மாவுக்கான வரிசைகளில் மக்கள் பல நாட்கள் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் தமது விருப்பத்துக்கேற்ப நாட்டை வைத்திருக்க முடியுமென சிலர் நினைக்கின்றனர்.

அவ்வாறு சிந்திப்பவர்களே நாளை ஜூன் (08) கொழும்பை சுற்றிவளைக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.

நாடும், நாட்டு மக்களும் இயல்பு நிலைக்கு திரும்புவதை இவர்கள் விரும்பவில்லை. இந்த முன்னேற்ற நிலையை கெடுக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். இதனால்தான், வீதியில் இறங்கி கொழும்பை சுற்றி வளைக்கப் போவதாக கூறுகின்றனர்.

இவர்களை, இராணுவமோ பொலிஸாரோ விரட்டத்தேவையில்லை. மக்களே விரட்டியடிப்பார்கள்.

நோயாளி ஒருவருக்கு ஏற்றப்பட்டுள்ள 'சேலைன் ' போத்தலை பிடுங்கி எறிய மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். அப்படி யாராவது செய்ய முயன்றால் மக்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டு அத்தகையோரை விரட்டியடிக்கவே செய்வர்.

சில நோய்களை குணமாக்க சில சிகிச்சை முறைகள் உள்ளன. எனவே, இவ்வாறான நோய்கள் உள்ளவர்களை குணமாக்கும் சிகிச்சையை ஜனாதிபதி கையிலெடுக்க வேண்டும். அதுதான், இந்நோயைக் குணமாக்க ஒரே வழியாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...