எயிட்கன் ஸ்பென்ஸ் உறுதியான EBITDA பெறுமதியாக ரூ. 30.1 பில்லியன் பதிவு

2023 நிதியாண்டின் வளர்ச்சி வீதம் 30.3% ஆக உயர்வு

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட முன்னணி நிறுவனமான எயிட்கன் ஸ்பென்ஸ் பிஎல்சி, 2022/2023 நிதியாண்டில் சிறந்த EBITDA (முதலீடு செய்யப்பட்ட பங்குகளின் வருமானம், வரிக்கு முந்திய செலவீனங்கள், வரி, மதிப்பிறக்கம் மற்றும் கடன் தீர்ப்புக்கான நிதி சேர்ப்பு ஆகிய அடங்கலான வருமானங்கள்) பெறுமதியான ரூ. 30.1 பில்லியனை பதிவு செய்துள்ளது. சகல துறைகளிலிருந்தான பங்களிப்புடன் இந்தப் பெறுமதி 30.3% வளர்ச்சியை எய்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்நிய செலாவணி வருமதிகள் நீங்கலாக, குழுமத்தின் EBITDA பெறுமதி 77.0% வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தமை விசேட அம்சமாகும்.

குழுமத்தின் செயற்பாடுகளினூடாக இலாபம் 15.8% உயர்வை பதிவு செய்திருந்ததுடன், ரூ. 16.4 பில்லியனிலிருந்து ரூ. 19.0 பில்லியன் வரை உயர்வடைந்திருந்தது. மேலும், 2023 மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில், அந்நிய செலாவணி வருமதி நீங்கலாக குழுமத்தின் செயற்பாடுகளினூடாக இலாபம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 85.2% எனும் வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது.

2023 மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் குழுமத்தின் வரிக்கு முந்திய இலாபம் ரூ. 11.2 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21.3% சரிவாகும். முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அந்நிய செலாவணி சார் வருமதிகளில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தமை இதில் பிரதானமாக தாக்கம் செய்திருந்ததுடன், வருடம் முழுவதிலும் காணப்பட்ட அதியுயர் வட்டி வீதங்கள் காரணமாக வட்டிசார் செலவுகளில் ஏற்பட்டிருந்த அதிகரிப்பும் பங்களிப்புச் செய்திருந்தது.

குழுமத்தின் வினைத்திறனில், ஆடைகள் உற்பத்தி மற்றும் மாலைதீவுகளைச் சேர்ந்த ஹோட்டல்கள் பிரிவு போன்றனவும் ஊக்குவிப்புடனான பங்களிப்பைச் செலுத்தியிருந்தன.

பெருந்தோட்டத்துறையில் மேம்படுத்தப்பட்ட பெறுபேறுகளும் குழுமத்தின் வினைத்திறனில் நேர்த்தியான பங்களிப்பை செலுத்தியிருந்தன.

எயிட்கன் ஸ்பென்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதி தவிசாளருமான கலாநிதி பராக்கிரம திசாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “சவால்கள் நிறைந்த ஆண்டில் இந்த நீண்ட கால நோக்கத்தைக் கொண்ட செயற்பாடு, மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்ததுடன், இந்த முதலீடுகளினூடாக, எமது குழுமத்தின் சகல வியாபாரப் பிரிவுகளிலும் தடங்கலில்லாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் முக்கிய பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது” என்றார்.

2022-_2023 நிதியாண்டில் பதிவாகியிருந்த இதர பிரதான முக்கிய அம்சங்களாவன:

சூரியப் படல் மின் உற்பத்தியாலையை கையகப்படுத்தியிருந்தமை, 10MW புதுப்பிக்கத்தக்க வலுப் பிறப்பாக்கல் திறனை, ரூ. 1.4 பில்லியன் முதலீட்டில் மேற்கொண்டிருந்தமை போன்றவற்றினூடாக குழுமம் புதுப்பிக்கத்தக்க வலுப் பிறப்பாக்கலினூடாக, நாட்டின் உச்ச கட்ட மின்பாவனைத் தேவையின் 1.4% க்கும் அதிகமான மின்பிறப்பாக்கல் பங்களிப்பை வழங்குகின்றது. கம்போடியாவில் சரக்கு கையாளல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இணைந்த செயற்பாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டு, தனது புவியியல்சார் பிரசன்னத்தை மேலும் விரிவாக்கம் செய்திருந்தது.

1983 ஆம் ஆண்டு முதல் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள எயிட்கன் ஸ்பென்ஸ், 150 வருடங்களுக்கு மேலான பாரம்பரிய சிறப்புடன் இயங்குகின்றது. 13000 இற்கும் அதிகமான ஊழிய அங்கத்தவர்களால், 16 தொழிற்துறைகளில், 9 நாடுகளில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்த வண்ணமுள்ளது. அந்நாடுகளில், இலங்கை, மாலைதீவுகள், ஃபிஜி, இந்தியா, ஓமான், மியன்மார், மொசாம்பிக், பங்களாதேஷ் மற்றும் கம்போடியா ஆகியன அடங்குகின்றன.


Add new comment

Or log in with...