பௌத்த மதத்திற்கு அவதூறான கருத்து; நதாஷா எதிரிசூரிய விமான நிலையத்தில் கைது

நிகழ்ச்சியொன்றில், பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக தெரிவித்து, மேடை நகைச்சுவை கலைஞரான (Standup Comedian) நதாஷா எதிரிசூரிய எனும் யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (27) சனிக்கிழமை இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நாட்டை விட்டு செல்வதற்காக வந்த நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பௌத்த மத விவகார ஆணையாளர் நாயகம் பொலிஸ் மாஅதிபரிடம் மேறகொண்ட முறைப்பாடு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

'மோடாபிமானய' (முட்டாள்தனமான பெருமை) எனும் பெயரில் அண்மையில் கொழும்பில் உள்ள பிரபல அரங்கு ஒன்றில் அவரால் நிகழ்த்தப்பட்ட நகைச்சுவை நிகழ்ச்சியில் பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் பல கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

குறித்த கருத்துகள் அடங்கிய வீடியோ காட்சி கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவியதோடு, பலரும் பல வகையில் இது தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

இது தொடர்பில் எழுந்த எதிர்ப்பை அடுத்து அவர், சமூக ஊடக அலைவரியொன்றில், தான் தெரிவித்த கருத்தினால் எந்தவொரு தரப்பினராவது பாதிக்கப்பட்டிருந்தால் தாம் அதற்காக மன்னிப்பும் கோருவதாக குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, அவர் காம வார்த்தைகள், கெட்ட வார்த்தைகள், பௌத்த பெண்கள் பாடசாலைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் குறித்தும் அவர் பொதுவெளியில் தெரிவித்த கருத்துகள் கடுமையாக விமர்சனங்களுக்குள்ளாகியிருந்தன.

எவ்வாறாயினும், இது தொடர்பில் குறித்த யுவதியை விசாரணை செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்த நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த யுவதியை நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நதாஷா எதிரிசூரிய பொலிஸ் கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...