நீர்ப்போசன பிரதேசத்திற்கு தீவைப்பு; 10 ஏக்கர் வரை எரிந்து நாசம்

- 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

திம்புள்ளை பத்தனை பொலிஸ் பிரிவிக்குட்பட்ட கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் நேத்ரா பிளேஸ் பகுதிக்கு மேல் அமைந்துள்ள நீர்ப்போசன வனப்பிரதேசத்திற்கு இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக அப்பகுதியில் 10 ஏக்கர் வரையுள்ள வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளன.

குறித்த தீக்காரணமாக தொலைபேசி கம்பிகளுக்கும் மின்சார கம்பிகளுக்கும் மற்றும் குடிநீரக் குழாய்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.

குறித்த பகுதியிலிருந்தே சாந்திபுரம் , சமாதானபுரம், நேத்ரா பிளேஸ், கொட்டகலை, கொமர்ஷல் உள்ளிட்ட பகுதியில் வாழும் சுமார் 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீரினைப் பெற்றுக்கொள்கின்றன.

இதனால் எதிர்காலத்தில் குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேநேரம் குறித்த வனப்பகுதியில் எமது நாட்டுக்கு உரித்தான பறவையினங்கள், மான், மரை , பன்றி, முயல் உள்ளிட்ட விலங்கினங்களும் வாழ்ந்து வருகின்றன.

இந்த தீ காரணமாக அவற்றின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

வரட்சியின் போது மக்கள் சிந்திக்காமல் செய்யும் விஷமத்தனமான செயல்கள் காரணமாக உயிரினங்களும் பொதுமக்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

நேற்று தீ வைக்கப்பட்ட போது இராணுவ பாதுகாப்பு அதிகாரிகளும் திம்புள்ள பத்தனை பொலிஸாரும் வந்து பார்வையிட்டதாகவும் தீயினைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கும் இதேவேளை தீ வைப்பதை கட்டுப்படுத்துவதற்கு தீவைப்பவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலமே முழுமையாக இவ்வாறான செயல்களைக் கட்டுப்படுத்த முடியுமென பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஹட்டன் விசேட நிருபர்


Add new comment

Or log in with...