பங்களாதேஷில் விலைவாசி குறித்து எழுதியவர் கைது

பங்களாதேஷின் முன்னணி பத்திரிகை ஒன்றின் செய்தியாளர் ஒருவரின் அதிக உணவு விலை பற்றிய செய்தி வைரலாகப் பரவியதை அடுத்து பொய்யான செய்தியை வெளியிட்ட குற்றச்சாட்டில் அந்த செய்தியாளர் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

பிரோதோம் ஆலோ தினசரி பத்திரிகையைச் சேர்ந்த சம்சுஸ்ஸமான் ஷம்ஸ் என்ற அந்த செய்தியாளர் கடந்த புதனன்று (29) கைது செய்யப்பட்ட நிலையில் மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். எனினும் அவருக்குப் பிணை மறுக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் சுதந்திர தினமான கடந்த மார்ச் 26 ஆம் திகதி அவர் வெளியிட்ட செய்தி, அரசாங்கத்தை கலங்கப்படுத்துவதாக உள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் கைது நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிட்டிருக்கும் உரிமைக் குழுக்கள், அரசு பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்குவதாகக் குற்றம்சாட்டியுள்ளன. கடந்த ஆண்டின் உலக பத்திரிகை சுதந்திர சுட்டெண்ணில் பங்களாதேஷ், ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கும் கீழ் 180 நாடுகளில் 162 ஆவது இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் ஷம்ஸ் எழுதிய செய்தியில் சுதந்திர தினத்தில் சாதாரண பங்களாதேஷ் மக்களின் வாழ்வை சித்தரிப்பதாக இருந்தது.


Add new comment

Or log in with...