ஆபாச நடிகை விவகாரம்: டிரம்ப் மீது குற்றச்சாட்டு

2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தகவல்களை மறைப்பதற்காக ஆபாச நடிகை ஒருவருக்கு பணம் கொடுத்தது தொடர்பில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவுள்ளது.

எனினும் இந்த வழக்கு தொடர்பான விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஆபாச நடிகை ஸ்டோமி டானியலுடன் தமக்கு இருப்பதாகக் குற்றம் சாட்டப்படும் தொடர்பு பற்றி வெளியே கூறாமல் இருப்பதற்கு அவருக்கு டிரம்ப் 130,000 டொலர் பணம் வழங்கியது தொடர்பில் டிரம்ப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய நடுவர் குழாம் ஒன்று ஆதரவாக வாக்களித்துள்ளது.

தாம் எந்த தவறும் செய்யவில்லை என்று 76 வயதான டிரம்ப் மறுத்துள்ளார். இந்நிலையில் அவர் குற்றவியல் குற்றச்சாட்டுக்கு முகம்கொடுக்கும் முதல் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியாக பதிவாகவுள்ளார்.

டிரம்ப் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுவதால், ‘தயார் நிலையில் இருக்க வேண்டும்’ என்று நியூயோர்க் பொலிஸாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தன் மீதான புகார் குறித்து வெளியில் பேசாமல் இருப்பதற்காக முன்னாள் ஆபாச நடிகை ஸ்டோமி டேனியல்ஸூக்கு ட்ரம்ப் பணம் கொடுத்ததாக, ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

மேலும் இந்தப் பணம் சட்டத்திற்கு புறம்பாக டிரம்பின் ஜனாதிபதி பிரசார கணக்கில் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

வரும் செவ்வாய்க்கிழமை அன்று டிரம்ப் மீது விசாரணை நடக்கும் என டிரம்பின் வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார்.

டிரம்ப் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அது குடியரசு கட்சிக்கு பின்னடைவாக அமையும் என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய குற்றச்சாட்டு காரணமாக, 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும் டிரம்பின் கனவு தகர்ந்து போகலாம். குற்றச்சாட்டு அரசியல் ரீதியான பழிவாங்கல், தேர்தல் தலையீடு என்று கூறும் டிரம்ப் தாம் நிரபராதி என்கிறார்.


Add new comment

Or log in with...