நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சைக்குப் பின் பாப்பரசரின் உடல் நிலை முன்னேற்றம்

சுவாசத் தொற்று பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாப்பரசர் பிரான்சிஸ் எதிர்வரும் நாட்களில் ரோம் மருத்துவமனையில் இருந்து வெளியேறுவார் என்று நம்பப்படுகிறது.

மூச்சுக்குழாய் அழற்சி தொற்றுக்காக நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சை வழங்கப்பட்டதை அடுத்து பாப்பரசரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.

பாப்பரசர் மாலையில் ஓய்வெடுத்தும் பிரார்த்தனையில் ஈடுபட்டும் நேரத்தை செலவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாப்பரசர் கடந்த புதன்கிழமை (29) கெமலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு, வழக்கமான மருத்துவ சோதனைக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டதாக முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்போது அவருக்கு மூச்சுக்குழாய் அழற்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதோடு தொடர்ந்து நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

“(பாப்பரசரின்) எதிர்பார்க்கப்படும் முன்னேற்றத்தின் அடிப்படையில், பரிசுத்த தந்தை அடுத்துவரும் நாட்களில் மருத்துவமனையில் இருந்து வெளியேறக் கூடும்” என்று அவரது மருத்துவக் குழுவை மேற்கோள்காட்டி வத்திக்கான் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக வத்திக்கான் பேச்சாளர் மட்டியோ பிரூனி கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், 86 வயதான பாப்பரசர் இரவில் நன்றாக ஓய்வெடுத்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

“இன்று காலை உணவுக்குப் பின்னர் அவர் சில பத்திரிகைகளை வாசித்ததோடு வேலைகளையும் ஆரம்பித்தார்” என்று பிரூனி தெரிவித்தார். தொடர்ந்து மருத்துவமனையின் தேவாலயத்திற்கு சென்ற பாப்பரசர் அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாப்பரசருக்கு இது அதிக வேலைப்பளு கொண்ட காலம் என்பதோடு ஈஸ்டர் வார இறுதியை ஒட்டி பல நிகழ்ச்சிகள் மற்றும் ஆராதனைகளில் பங்கேற்க வேண்டி உள்ளார்.

இந்த வார இறுதியில் பனை ஞாயிறு ஆராதனை இடம்பெறவுள்ளதோடு அடுத்த வாரத்தில் ஈஸ்டர் கொண்டாட்டம் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் பனை ஞாயிறு ஆராதனைக்கு முன்னர் பாப்பரசர் மருத்துவனையில் இருந்து வெளியேறுவார் என்று தாதிகள் நம்பிக்கை தெரிவித்திருப்பதாக இத்தாலி செய்தி நிறுவனமான அன்சா தெரிவித்துள்ளது.

ஆர்ஜன்டீனாவைச் சேர்ந்த பாப்பரசர் பிரான்சிஸ் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 10 ஆண்டு பூர்த்தியை கடந்த மாதம் கொண்டாடினார். அவர் தனது வாழ்நாளில் பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். இதில் 21 வயதில் அவரது நுரையீரலில் சிறு பகுதி அகற்றப்பட்டது.

அதிக வேலைப்பளுவுடன் பல இடங்களுக்கு பயணிக்கும் பாப்பரசர் அண்மைக் காலங்களில் முழங்கால் பிரச்சினை காரணமாக சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார்.


Add new comment

Or log in with...