ஆஸி. பரா மெய்வல்லுனரில் இலங்கையின் மூவர் பங்கேற்பு

அவுஸ்திரேலியா பகிரங்க பரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கையின் மூன்று வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

கடந்த மார்ச் 30ஆம் திகதி முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை இந்தப் போட்டித்தொடர் பிரிஸ்பேனில் நடைபெறுவதோடு, இதில் தினேஷ் பிரியந்த, சமித்த துலான் மற்றும் பாலித பண்டார ஆகிய வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

2020 டோக்கியோ பராலிம்பிக் ஈட்டி எறிதல் எப்46 போட்டியில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியன்த, 2016 பராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

அதேபோன்று, 2020 பராலிம்பிக் ஈட்டி எறிதல் எப்64 போட்டியில் பங்குகொண்ட சமித்த துலான் வெண்கலப் பதக்கத்தை வென்றதுடன், 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குகொண்ட பாலித பண்டார பரிதி வட்டம் எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

அடுத்த ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள பராலிம்பிக்கில் இலங்கைக்கு பதக்கங்களை வென்று கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற வீரர்களாக இம்மூவரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அவுஸ்திரேலியா பகிரங்க பரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் முகாமையாளராக பிரதீப் நிஷாந்த செயற்படுகிறார்.


Add new comment

Or log in with...