இந்தியாவில் கிணற்றில் விழுந்து 35 பேர் பலி

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் கோவில் ஒன்றில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது கிணற்றுக்குள் விழுந்து குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோர் நகரில் இடம்பெற்ற இந்த விபத்தில் பதினான்கு பேர் மீட்கப்பட்டிருக்கும் நிலையில் ஒருவர் தொடர்ந்து காணாமல்போயுள்ளார்.

கிணற்றின் மீது போடப்பட்டிருந்த கொங்கிறீட் சுவரில் பங்தர்கள் நின்றிருந்த நிலையில் பாரம் தாங்காமல் அந்த சுவர் இடிந்து விழுந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் வேதனை தருவதாக பிரதமர் நரேந்திரா மோடி தெரிவித்துள்ளார்.

இந்துக்களின் ராம் நவாமி விழாவையொட்டி நேற்று முன்தினம் (30) பெலெஷ்வர் மஹதேவ் ஜுலேலால் கோவில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்த பிரார்த்தனை நிகழ்வின்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கிணற்றை மூடிய கொங்கிறீட் தட்டில் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் நின்றிருந்த நிலையில் பாரம் தாங்காமல் அந்தத் தட்டு உடைந்து அதன் மேலிருந்தவர்கள் சுமார் 40 அடி ஆழமான கிணற்றுக்குள் விழுந்துள்ளனர்.

நான்கு தசாப்தங்களுக்கு முன்னரே இந்த கிணறு மூடப்பட்டு கோவில் கட்டப்பட்டிருப்பதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதில் இருவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியதாக மூத்த அதிகாரி ஒருவரான இளையராஜா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

மீட்பு நடவடிக்கைகள் நேற்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 500,000 ரூபாவும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாவும் இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில முதலமைச்சர் சிவராஜ் செளஹான் அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கவலையை வெளியிட்டிருக்கும் மோடி, 200,000 ரூபா இழப்பீட்டையும் அறிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...