சிறந்த கொழுந்து பறிப்பாளர்கள் போட்டியை வெற்றிகரமாக நடத்திய ஹேலிஸ்

சமர்செட் தோட்டத்தின் திருமதி ஆர். சீதையம்மா தனது வெற்றிக் கிண்ணத்தோடு மகிழ்ச்சியுடன் ஹேய்லிஸ் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹான் பண்டித்தகே மற்றும் ஹேய்லிஸ் பெருந்தோட்ட முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி ரோஷான் ராஜதுரை ஆகியோர் இருப்பதை படத்தில் காணலாம்.

இலங்கையில் நிலையான விவசாய வணிகத் துறையில் முன்னணியிலுள்ள ஹேய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனம், சிறந்த மற்றும் நிபுணத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 2023 சிறந்த தேயிலை கொழுந்து பறிப்பாளர் தெரிவு போட்டியை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

ஹேய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின் ஊழியர் சமூகத்தின் அர்ப்பணிப்பிற்கும் கடின உழைப்பிற்கும் பெறுமதி சேர்க்கும் வகையில் களனி வெலி பெருந்தோட்ட நிறுவனம், தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் ஹேய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனத்துக்கு சொந்தமான ஹொரண பெருந்தோட்ட நிறுவனம் ஆகிய தோட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கொழுந்து பறிப்பாளர்களுக்கிடையில் இப்போட்டி நடைபெற்றது. கோவிட்-19 தொற்றுநோய் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு வருட இடைவெளிக்கு பின்னர் இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியானது, ஊழியர்களின் வலுவான வேண்டுகோளைக் கவனத்தில் கொண்டு இந்த போட்டி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான சமர்செட் தோட்டத்தைச் சேர்ந்த திருமதி ஆர். சீதையம்மா 2023 ஆம் ஆண்டின் சிறந்த தேயிலைக் கொழுந்து பறிப்பாளராக மகுடம் சூட்டப்பட்டார். தலவாக்கலை பெருந்தோட்டக் கம்பனிக்கான தங்க விருதை வென்றதுடன், அவர் 20 நிமிடங்களுக்குள் நம்பமுடியாத 10.42 கிலோ கொழுந்துகளைப் பறித்து 82.6% என்ற அதிகபட்ச மதிப்பெண்ணுடன் தங்க விருதை வென்றார்.

“போட்டியில் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தேயிலை கொழுந்து பறிப்பது குறித்து நல்ல பயிற்சி அளித்து இவ்வாறான போட்டியில் பங்குபற்ற வாய்ப்பளித்த எமது கலாநிதி ரொஷான் ராஜதுரை, தோட்ட முகாமையாளர்கள் மற்றும் ஹேய்லிஸ் நிறுவனம் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும் எனது குடும்பத்தினரும் நண்பர்களும் எனக்கு ஆதரவளித்து என்னை ஊக்கப்படுத்துகிறார்கள்.” என போட்டியில் 300,000 ரூபா பரிசுத் தொகையை பெற்றுக் கொண்ட வேளையில் கருத்து தெரிவிக்கும் போது சீதையம்மா தெரிவித்தார்.

களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பட்ல்கல்ல தோட்டத்தைச் சேர்ந்த எஸ். கோமதி தங்க விருதை வென்றார். அல்டன் தோட்டத்தைச் சேர்ந்த திருமதி எம். விக்னேஸ்வரி ஹொரணை தோட்ட நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தங்க விருதை வென்றார். ஹேய்லிஸ் பெருநிறுவனம் தங்கம் விருது பெற்ற அனைவருக்கும் தலா 100,000 ரூபாவும், வெள்ளி விருது பெற்றவர்களுக்கு தலா 75,000 ரூபாவும் மற்றும் வெண்கல விருது வென்ற அனைவருக்கும் தலா 50,000 ரூபாவும் வழங்கியது.

தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த தொழில் நிபுணர்கள் மற்றும் ஹேய்லிஸ் பெருந்தோட்டத்தின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் நடுவர் குழுவாக கலந்து கொண்டனர். சரியான நேரத்தில் பறிக்கப்பட்ட தேயிலையின் அளவு, அதன் தரம் மற்றும் அறுவடையின் போது தேயிலை செடிகளைப் பராமரிப்பதில் அவர்கள் காட்டிய அக்கறை ஆகியவற்றின் அடிப்படையில் போட்டியாளர்கள் மதிப்பிடப்பட்டனர்.

“எமது மக்கள் எங்கள் வணிகத்தின் மூலகாரண கர்த்தாக்கள். எனவே, அவர்கள் ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பு மற்றும் திறமைகளை அங்கீகரித்து பாராட்டுவது அவசியம். இவ்வாறான அறிமுகங்களின் ஊடாக, பாதுகாப்பான மற்றும் ஊழியர்களுக்கு நட்பான பணிச்சூழலை நிறுவுவதுடன், இந்நாட்டில் பெருந்தோட்டக் கைத்தொழில் முன்னேற்றத்திற்கான சிறந்த வழியை உறுதிப்படுத்த முடியும் எனவும் நாங்கள் நம்புகிறோம்.” என ஹேய்லிஸ் குழுமத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹான் பண்டித்தகே தெரிவித்தார்.

“இன்று, இலங்கையின் தேயிலை தொழில்துறை பல சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்த பிரச்சனைகள் இருந்தபோதிலும், தொழில் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. இந்த நாட்டிற்கு ஏற்றுமதி வருமானம், தேயிலையின் இருப்பு மற்றும் தேயிலை தொழிற்துறையின் தொடர்ச்சியான அபிவிருத்தி ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்க வேண்டியது தேசிய தேவையாகும். எங்கள் தேயிலை பறிப்பவர்களுக்கும் அவர்களின் மேம்பாட்டிற்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் அதிகாரம் அளிப்பதில் ஹேய்லிஸ் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.” என பண்டித்தகே மேலும் தெரிவித்தார்.

போட்டியின் பின்னர், நுவரெலியா ரதெல்ல கிரிக்கெட் மைதானத்தில் ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தினால் வெற்றி பெற்ற போட்டியாளர்களை கௌரவிக்கும் வகையில் விசேட பரிசளிப்பு விழா நடைபெற்றது.

“இன்றைய எமது ஊழியர்களின் சிறப்பான செயற்பாடு இலங்கையின் தேயிலை தொழிற்துறையின் உண்மையான பலத்திற்கு சான்றாகும். தோட்டங்களின் எதிர்காலத்திற்கான ஹேய்லிஸ் குழுமத்தின் தொலைநோக்கு எங்கள் ஊழியர்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது, மேலும் வணிகத்தின் அனைத்து அம்சங்களிலும் நிலையான உற்பத்தித்திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. எங்கள் தேயிலை கொழுந்து பறிப்பாளர்களை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தி, நீண்டகால நிலையான வளர்ச்சியில் எங்கள் கவனம் உள்ளது.”

“ஹேய்லிஸின் சிறந்த தேயிலைக் கொழுந்து பறிப்பாளர் போட்டியானது, எங்கள் பணியாளர்களின் அர்ப்பணிப்பை மதிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் திட்டங்களின் ஒரு பகுதியாகும். எங்கள் பணியாளர் சமூகத்தை மேம்படுத்தி, தரமான ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்கான அணுகலை உறுதி செய்யும் அதே வேளையில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உறுதிசெய்ய நாங்கள் பணியாற்றுகிறோம். இந்த முயற்சிகள் எங்கள் வணிகத்தின் வெற்றிக்கு முக்கியமானவை. எவ்வாறாயினும், இலங்கை தேயிலை தொழில்துறைக்கு நிலையான புதிய பாதையை அமைக்க அவை உதவுகின்றன.” என ஹேய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.

ஹேய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனம் இலங்கையில் தனது தொழில்துறையில் முதன்முதலாக தேசிய தகைமை உரிமத்திற்கான NVQ சான்றிதழை கள உத்தியோகத்தர்களுக்கு அவர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்காக வழங்கியுள்ளது. பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் ஊடாக புத்தாக்கங்கள் மற்றும் வளர்ந்து வரும் சிறந்த நடைமுறைகள் பற்றிய அறிவைப் பகிர்ந்து கொள்வதற்காக இலங்கையின் முதலாவது தோட்ட முகாமைத்துவ மாநாட்டையும் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. ஹேய்லிஸின் பெருந்தோட்ட நிறுவனங்கள் தாய் மற்றும் குழந்தை நட்பு தோட்டக் கொள்கைகளையும் ஆரம்பித்துள்ளதுடன். நெறிமுறை மற்றும் நிலையான தோட்ட நிர்வாகத்தில் புதிய அளவுகோல்களை அமைப்பதற்காக உலகளாவிய மற்றும் உள்ளூர் அங்கீகாரத்தை அது தொடர்ந்து வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hayleys Plantations Best Tea Harvester போட்டியானது, Ceylon Teaன் 150வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 2018 இல் இலங்கை தேயிலை சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இதேபோன்ற போட்டியின் உத்வேகத்தைப் பெற்றுள்ளது. மக்களிடம் இருந்து கிடைத்த நல்ல வரவேற்பின் காரணமாக, ஹேய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனம் தனது தோட்டங்களில் இந்த போட்டியை ஆரம்பிக்க முடிவெடுத்திருந்தமை விசேட அம்சமாகும்.

படவிளக்கம்

படம் 02: ஹேய்லிஸ் குழுமத்தின் சிரேஷ்ட நிர்வாகத்துடன் ஹேய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின் சிறந்த 40 தேயிலை கொழுந்து பறிப்பாளர்கள் படத்தில் இருப்பதை காணலாம்.
படம் 03: போட்டியின் போது தேயிலை அறுவடை இயந்திரத்துடன் இருக்கும் கங்காணியை படத்தில் காணலாம்.


Add new comment

Or log in with...