கொடிகாமம் - கரம்பகம்; 3 பிள்ளைகளின் தந்தை வெட்டிப் படுகொலை

- இனந்தெரியாத குழுவினரை தேடும் பொலிஸார்

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பகம் எல்.ஆர்.சி தோட்டம் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (30) வியாழக்கிழமை இரவு  11.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடத்தற்பளையைச் சேர்ந்த குறித்த நபர் கரம்பகம் பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் இருந்த வேளையில் இனந்தெரியாத குழுவொன்று அவர் மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தி கொலை செய்துவிட்டு தப்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் விடத்தற்பளை கொடிகாமத்தைச் சேர்ந்த 43 வயதான சிவசோதி சிவகுமார் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தலை, கழுத்து, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் பாரிய வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட நபர் சிறிது காலம் பிரதேசசபை ஒன்றின் பணியாளராக கடமை புரிந்து தற்போது விவசாயத்தில் ஈடுபட்டு வருபவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பான குற்றவாளிகளைக் கைது செய்வது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சாவகச்சேரி விசேட நிருபர்


Add new comment

Or log in with...