ஒருங்கிணைந்த திட்டமிடலே கல்வி, பொருளாதார அபிவிருத்திக்கு வழிவகுக்கும்

  • கல்வி அமைச்சின் பிரதிப்பணிப்பாளர் எம். ஆர். எம். இர்சான்

விசினவ ஒருங்கிணைக்கப்பட்ட சிவில் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் சமூக மேம்பாட்டிற்கு பொது நிறுவனங்களின் திட்டமிடல் என்னும் தலைப்பில் விசேட செயலமர்வு சியாம்பலாகஸ்கொடுவ அந்நூர் அரபுக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் விசினவ ஒருங்கிணைக்கப்பட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவரும் கல்வி அமைச்சின் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான எம்.ஆர். எம். இர்சான் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் விசேட வளவாளராக பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.எச்.எம். பழீல் உரையாற்றினார். இதன் போது அந்நூர் அரபுக் கல்லூரியின் அதிபர் முனவ்பர், இலங்கை அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் மேலதிகப் பணிப்பாளர் எம். எச். எம். ரியாழ்டீன், செயலாளர் ஏ. எம். ராமிஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், கெகுணுகொல்ல தேசிய பாடசாலை, சியம்பலாகஸ்கொட்டுவ பாடசாலை ஆகியவற்றின் அதிபர்களும் கலந்து கொண்டனர்

விசினவ ஒருங்கிணைக்கப்பட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவரான கல்வி அமைச்சின் பிரதி கல்விப் பணிப்பாளர் எம். ஆர். எம். இர்சான் உரையாற்றும் போது

மனிதன் என்பவன் தனித்து இயங்க முடியாது. எப்போதும் கூட்டாக ஒரு சமூகப் பிராணியாகத்தான் காணப்படுகின்றான். அந்த வகையில் தனித்து இயங்காமல் ஏதோ ஒரு வகையில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். பிறருக்கு ஒத்துழைப்புடனும் ஒத்தாசையுடனும் வாழ வேண்டும் என்றுதான் அவன் பழகிக் கொண்டிருக்கின்றான். அந்தவகையில் தான் ஒவ்வொருவரும் தங்களுக்கு முடியுமான ஏதோ ஒரு வகையில் சமூகப் பங்களிப்புக்களை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் விசினவ குருநாகல் மாவட்டத்திலே முஸ்லிம்கள் பரந்து, செறிந்து வாழக் கூடிய பிரதேசத்துக்கும் அதிகமான கிராமங்களைக் கொண்ட பகுதிகளில் 20,000க்கும் மேற்பட்ட மக்கள் சனத்தொகையுள்ளனர். 40 க்கும் மேற்பட்ட பள்ளிகள், 10 பாடசாலைகளையும் கொண்டு இயங்குகின்ற ஒரு பெரிய பிரதேசம். இங்கு ஒவ்வொரு கிராமங்களும் ஏதோ ஒரு வகையில் சமூக நிறுவனங்களைச் சார்ந்து இயங்குவதை நாங்கள் கண்கூடாகக் காண்கின்றோம். ஒவ்வொரு கிராமத்திலும் கல்வி அபிவிருத்திச் சங்கம், ஜனாஸா சங்கம், விவசாயச் சங்கம், மகளிர் அமைப்புக்கள் எனப் பல்வேறுபட்டவை தனித்தனியாக இயங்கி வருகின்றன.

விசினவப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் ஒரு தனித்தனியான கிராமங்களைக் கொண்ட பிரதேசம். தொடர் கிராமத் தொகுதிகளைக் கொண்ட பிரதேசம். அந்த வகையில் ஒவ்வொரு ஊர்களிலும் தனித்தனியாக இயங்குகின்ற இந்த அமைப்புக்கள் அடுத்த கிராமங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் பங்களிப்புக்களைச் செய்யலாம். உதவிகளைச் செய்யலாம். ஒன்றாக இணைந்து செய்யும் போது பிற அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் செய்யும் போது இதை விட அதிகமான பிரயோசனத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அந்த அடிப்படையில் நாங்கள் அக்கிராமங்களிலுள்ள அமைப்புக்களை கூட்டாக இணைத்து இயங்குவதால் வினைத்திறனும் விளைத்திறனும் மேலும் மேற்கொள்ளலாம் என்பதைப் பற்றி தெளிவூட்டலாம் எனக் கருதியே இந்த ஏற்பாட்டை நாங்கள் செய்தோம்.

பொதுவாக இந்த பிரதேசத்தில் காணப்படுகின்ற பொதுமக்களை நாங்கள் அழைக்கவில்லை. சமூகத்தோடு இணைந்து சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதிநிதிகளை நாங்கள் அழைத்தோம். பாடசாலை அபிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், பாடசாலை அதிபர்கள், பள்ளி பரிபாலன சபை போன்ற சிவில் சமூக உறுப்பினர்களை அழைத்து எவ்வாறு மேலும் கிராம அபிவிருத்திகளை முன்னெடுக்கலாம் என்ற தெளிவூட்டலை மேற்கொள்வதற்காகவே இந்தக் கூட்டத்தைக் கூடினோம்.

ஒவ்வொரு சமூகச் செயற்பாட்டாளர்களும் அல்லாஹ்வுக்குப் பயந்தவர்களாக, நாணயம் உள்ளவர்களாக நம்பிக்கையுள்ளவர்களாக இருத்தல் வேண்டும். அது முதலாவது முக்கியமான விடயம். அதேபோன்று தாங்கள் ஈடுபடும் சமூகச் செயற்பாடுகள் சம்பந்தமாக பூரண அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டும். அதே போன்று விவசாயக் கழகங்களில் செயற்படுகின்றவர்கள் விவசாயம் தொடர்பான அறிவு இருத்தல் வேண்டும். எனவே அந்த வகையில் ஒவ்வொரு சமூக அமைப்பினர்களும் தங்களது துறையின் கீழ் பூரண தெளிவுடன் தமது சமூகப் பணியை மேற்கொண்டால் அவர்கள் இன்னும் அதிகமான செயற்பாடுகளைச் செய்யலாம். அந்த வகையில் இந்த சிவில் சமூக அமைப்புக்களுக்கு தெளிவூட்டலை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டித்தான் இன்று நாங்கள் ஓரு செயலமர்வை ஏற்பாடு செய்தோம். எனவே எங்களது செயற்பாடுகள் திட்டமிட்டு ஒழுங்கான முறையில் எவ்வாறு செயற்படுத்தலாம் என்பதைப் பற்றி தெளிவூட்டலாம் அத்தோடு சமூக சேவையாளர்கள் எத்தகைய பண்புடன் இருக்க வேண்டும் என்பது பற்றியும் தெளிவூட்டவே எமது விசேட வளவாளராக எஸ். ஏச். எம். பழீல் அவர்களை அழைத்தோம்.

இவர் இலங்கையில் நாடளாவிய ரீதியில் அதிகமான சொற்பொழிவுகளைச் செய்து மிகப் பிரபல்யம் பெற்றவர். அவர் அதிகளவிலான நூல்களையும் பேருவளை ஜாமியா நளீமியா கலா பீடத்தில் இஸ்லாமியத் துறையில் நீண்ட காலமாக விவுரையாற்றி வருபவர்.

எங்களுடைய ஒருங்கிணைந்த அமைப்பு ஸ்தாபிக்கப்பட்ட உடனே ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம், அதன் பின்பு கொரோனா தொற்று நோய், அதன் பின்பு பொருளாதார நெருக்கடிகள் இப்படி பல பிரச்சினைகள் நாட்டில் நிலவின. இதனால் எமது அமைப்பின் செயற்பாடுகள் தடைப்பட்டன. தற்போது நாட்டில் ஒரு சுமுகமான நிலையொன்று நிலவி வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சியாம்பலாகஸ்கொடுவ அந்நூர் அரபுக் கல்லூரியின் அதிபர் முனவ்பர்

காலத்தையும் நேரத்தையும் ஒதுக்கி சமூகத்தின் மேம்பாட்டுக்காக செயற்படுகின்ற சமூகப் பணியாளர்களை அல்லாஹ் மிகவும் விரும்புகின்றான். நேசிக்கின்றான். அவர்களுடைய செயற்பாடுகளை அவதானித்து சந்தோசம் அடைகின்றான். ஒரு அடியானை அல்லாஹ் விரும்பி விட்டான் எனில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வானத்திலுள்ள வானவர்கள் அனைவரையும் அழைத்து இந்த அடியானை அல்லாஹ் விரும்புகின்றான். நீங்கள் விரும்புங்கள். அதற்குப் பின்னால் அந்த வானவர்கள் அனைவரும் அந்த அடியானின் மீது அல்லது அந்தச் சமூகப் பணியாளன் மீது நெருக்கமான அன்பு கொள்ளுகின்றனர். எல்லோரும் விரும்புகின்றார்கள். இப்படியாக வானத்திலே இருக்கக் கூடிய அனைவரும் விரும்பி விட்டால் நபி நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் கூற்றுப்படி மக்களுக்கு மத்தியிலே அவர்களை பொறுப்பை ஏற்றுக் கொள்கின்ற என்ற தன்மையை அல்லாஹ் ஏற்படுத்துகிறான். அல்லாஹ் அந்த அடியானை அன்பு கொள்ளும் போதுதான் சமூகத்திற்கு மத்தியிலே பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றான்.

அல்லாஹ் எங்களை விரும்ப வேண்டும். அவன் சந்தோசம் அடைய வேண்டும் என்ற நோக்கத்திலேதான் நாங்கள் அனைவரும் இந்த இடத்தில் ஒன்று கூடியிருக்கின்றோம். இது ஒரு சிறந்த கூட்டம்.

நாம் இந்தச் சமூகப் பணிகளை செய்யும் போது எத்தனையோ மக்கள் எமது சமூகப் பணிகள் மூலமாகப் பிரயோசனம் அடைவார்கள். சமூகப் பணியாளன்தான் ஒரு சிறந்த மனிதன். சிறந்த மனிதர்கள் கூடியுள்ள ஒரு நிகழ்ச்சியிலேதான் நாங்கள் கலந்து கொண்டிருக்கின்றோம்.

சமூகத்தைப் பற்றிச் சிந்திப்பது. சமூக நலன்களுக்காக வேண்டி ஒன்றுபடுவது. தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தல் போன்ற இவையெல்லாம் சமூகத்தின் மிக முக்கியமாக கருத்திற்கொள்ள வேண்டிய அம்சமாக இருக்கிறது.

பேருவளை ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ். எச். எம். பழீல்

விசினவ என்ற பிரதேசம் முழு இலங்கைக்கும் ஒளியைப் பாய்ச்சுகின்ற தீபமாக விளங்குகின்ற இரு பாடசாலைகள் உள்ளன. எனது ஊர் நாச்சியாதீவு ஆகும். எங்கள் ஊரில் பள்ளிவாசல் தலைவராக இருப்பவர் சியாம்பலாகஸ்கொடுவையில் படித்தவர்தான். அங்கு கல்வி புகட்டும் பல ஆசிரியர்கள் இங்கு ஊரில் படித்தவர்கள். அரபு கல்லூரி அல் நூரில் கல்வி கற்றவர்கள் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தீன் பணி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். உலக கல்வியை மார்க்கக் கல்வியை நேசிக்கின்ற அதற்காக வேண்டி ஒத்துழைப்பு வழங்குகின்ற பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று நாங்கள் பெருமைப்பட முடியும்.

விசனவ என்ற சமூக செயற்பாட்டு அமைப்பானது மிக முக்கியமான குறிக்கோளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மிக அழகாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சுமார் 29 கிராமங்கள் இருக்கின்றன. இந்த ஒவ்வொரு கிராமத்திலும் வைத்தியர்கள், சட்டத்தரணிகள், கல்விமான்கள் அரச ஊழியர்கள், துறை சார்ந்த நிபுணர்கள் போன்றவர்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்கு மத்தியிலே எல்லோரும் சேர்ந்து ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றதொரு பரஸ்பர புரிந்துணர்வு இருந்தது. அது தான் இந்த அமைப்பு. இஸ்லாத்திலும் இந்த முயற்சிக்கு நன்மை இருக்கிறது. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்று சொல்வார்கள். தனித்தனியாக ஒவ்வொருவரும் திட்டமிட்டால் ஒரு தனியான திட்டமாக இருக்கும். ஆனாலும் ஒரு கிராமத்தில் போதை ஒழிப்பை ஒழிக்க வேண்டும் என்று திட்டமிட்டால் அவர்கள் வெற்றி பெறுவார்கள். அதேவேளையில் பக்கத்தில் உள்ள கிராமத்தில் அதற்கான திட்டம் இல்லை என்றால் அங்குள்ள இளைஞர்கள் சட்டமில்லாத கிராமத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. தனித்து நிற்க முடியாது என்பதற்கு நல்லதொரு உதாரணம் இங்கு எடுத்துக் காட்டப்பட்டது.

கல்வியில் முன்னேற வேண்டுமாயினும். அரசியல் ரீதியிலான விழிப்புணர்வு வர வேண்டுமாயினும் பொருளாதார ரீதியிலான ஒரு மேம்பாடு வர வேண்டுமாயினும் தனித்து திட்டமிடக் கூடாது. முஸ்லிம்களுடைய சிறப்புப் பண்பு என்னவென்றால் எல்லா விடயங்களை கலந்து ஆலோசிப்பதாகும். இது பற்றி குர்ஆன் சொல்லுகின்றது. நல்ல விடயங்களிலும் இறையச்ச விடயங்களிலும் பரஸ்பரம் ஒத்துழைப்பு நல்குங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

ஒருவர் மற்றவருடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுதல், ஒரு கிராமம் இன்னுமொரு கிராமத்தோடு இணைந்து செயற்படுதல் ஒரு பாடசாலையின் அதிபர் ஒரு அரபுக் கல்லூரியின் அதிபரோடு சேர்ந்து கூட்டிணைந்த திட்டத்தை வகுத்தல் ஆகும். இதுதான் விசினவ அமைப்பினுடைய நோக்கமாக இருப்பது என்றால் நிச்சயமாக அல்லாஹ்தஆலா அருள்பாளிப்பான்.

தலைமைத்துவம் என்பதற்கான ஒரு வரைவிலக்கணம் உள்ளன. குறித்த இலக்கை நாம் அடையும் போது பிறரிலே செல்வாக்குத் செலுத்துவதுதான் தலைமைத்துவம்.எனவேதான் அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி என்று சொல்வார்கள். ஒரு சமுதாயத்தில் இருக்கின்ற பிரதானிகள் பற்றி அல்லாஹ்தஆலா அல்குர்ஆனில் மிகச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளான்.

நூறு ஒட்டகை இருந்தால் அதில் ஒரு ஒட்டகையைத்தான் பயணம் செய்வதற்குப் பொருத்தமான ஒட்டகையாகக் கண்டு கொள்ளலாம். எல்லா ஒட்டகைகளும் பயணத்திற்குப் பொருத்தமான ஒட்டகைகளல்ல.எல்லோருக்கும் தலைமைத்துவம் வகிக்கின்ற தன்மை கிடையாது. மிக அரிதிலும் அரிதாகத்தான் தலைமைத்துவ ஆளுமையுடையவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் இங்கு வருகை தந்துள்ள அனைவரும் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள். எனவே சமூகப் பணிகளில் ஈடுபடுகின்ற ஒவ்வொருவரும் தனித்தனியான மாணிக்கங்கள், முத்துக்கள் என்பது மனங்கொள்ளத்தக்கது. சமூகப் பணி மிகவும் மகத்தான பணி. பொறுப்புள்ள பணி. நபி நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் “ மூன்று பேர் பயணம் செய்யும் போது ஒருவரைத் தலைவராகத் தெரிவு செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்கள் என்பது மட்டுமல்ல தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுவது என்பது அல்லாஹ்வுக்கும் ரஸூலுக்கும் கட்டுப்படுவதற்குச் சமன் என்று அல்லாஹ் அல்குர்ஆனில் கூறியுள்ளான்.

நான் இன்று மனிதனாக இருக்கின்றேன் என்றால் அதற்கு முழுக் காரணமும் நளீம் ஹாஜியார்தான். இன்று 30 கலாநிதி உருவாக்கிய நிறுவனம் என்பது மட்டுமல்ல அமைச்சுக்களின் செயலாளர்களைக் கூட உருவாக்கி இருக்கிறது. உதவி செயலாளர்கள், பொது நிர்வாகம், வெளிநாட்டு நிர்வாகம், கல்வி நிர்வாகம் என்று சொல்லக் கூடிய பல தரப்பினர்கள் இருக்கிறார்கள். கலாநிதி ரவூப் செய்ன் அவர்கள் 54 ஆவது புத்தகத்தை வெளியிட்டுள்ளார். 42 வயதில் 54 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இது சாதாரண விடயமல்ல. இவை பற்றி பேசக் காரணம். நளீம் ஹாஜியார் என்ற ஒரு செல்வந்தர் அவர் எவ்வளவு தூர நோக்கோடு இந்த தலைமைத்துவத்தை எடுத்து இருக்கிறார். கலாநிதி சுக்ரி அடிக்கடி காலை கூட்டத்தில் கூறுவது “முஸ்லிம்களுடைய அறிவுத் தலைமைத்துவங்கள் உங்களால் உருவாக்கப்பட வேண்டும்” என்று கூறுவார். நளீம் ஹாஜியார் 25 ஏக்கர் காணியை அல்லாஹ்வுக்காக தியாகம் செய்தார். இன்று அதே பூமியில் அடக்கப்பட்டு அதனைக் கடந்து செல்பவர்கள். அவருக்காக துஆச் செய்கிறார்கள். எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பது முக்கிய மல்ல எப்படி வாழ்ந்தோம் என்பது தான் முக்கியம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

செயலாளர் ஏ. எம். ராமிஸ்

விசினவ சமூக அபிவிருத்தி நிறுவனம் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பின் பிரதான நோக்கம் விசினவப் பிரதேசத்தில் இருக்கின்ற பொதுப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதுதான் முக்கிய நோக்கம். குறிப்பாக நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கு பங்களிப்புச் செய்வது தான் பிரதான நோக்கம் இவ்வமைப்பின் முதல் தலைவர் தற்போது இலங்கை அச்சகத்தில் மேலதிகப் பணிப்பாளராக கடமையாற்றுகின்ற எம். எச். எம். ரியாழ்தீன் அவர்களும் 2020, 2021 காலப் பகுதியில் ஓய்வு பெற்ற அதிபர் ஏ. டி. எம். முஸம்மில் அவர்களும், தற்போது 2022 ஆம் ஆண்டில் இருந்து கல்வி அமைச்சின் பிரதிப் கல்விப் பணிப்பாளர் எம். ஆர். எம். இர்சான் அவர்கள் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்.

இக்பால் அலி


Add new comment

Or log in with...