ரமழான் மாதம் எத்தகைய தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும் நன்மை தீமைகளைப் பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப்பெற்றது. ஆகவே உங்களில் எவர்
அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதிலே நோன்பு
நோற்கட்டும். (2:185)
உலக மக்களுக்கான வழிகாட்டியாகவும் மனிதர்களுக்கு நன்மையையும் தீமையையும் வேறுபடுத்திக் காட்டுவதாகவும் அல்குர்ஆன் அருளப்பட்டதைக் கொண்டாடும் வகையிலேயே முஸ்லிம்கள் ரமழானில் நோன்பை அனுஷ்டிக்கின்றனர். அல் குர்ஆன் அருளப்பட்டதன் நோக்கத்தை அல்லாஹ்தஆலா பிறிதொரு இடத்திலே குறிப்பிடும் போது, 'இது வேதநூல். இதில் சந்தேகமே இல்லை. தக்வா உள்ளவர்களுக்கு இது நேர்வழியைக் காட்டும் (2:02) என்று குறிப்பிடுகின்றான்.
நோன்பு கடமையாக்கப்பட்டதைக் குறிப்பிடுகின்ற அல்குர்ஆன் உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது விதியாக்கப்பட்டது போலவே உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்படுகிறது. நீங்கள் தக்வா உள்ளவர்களாவதற்காக என்று குறிப்பிடுகிறது. (2:183)
இஸ்லாம் மனிதனுக்கு எதனையும் விதியாக்கும் போது அதற்கான இலக்கையும் சொல்லி வைக்கவும் தவறியதில்லை. தொழுகையைப் பற்றிக் கூறும் போது என்னை நினைவுபடுத்துவதற்காகத் தொழுங்கள் என்கிறது. ஸகாத் பற்றிக் கூறும் போது அது உங்களைத் தூய்மைப்படுத்தும் என்கிறது. இதேபோல நோன்பு பற்றிக் கூறும் போது நீங்கள் தக்வா உள்ளவர்களாகலாம் என்கிறது.
தொழுகையில் அல்லாஹ்வுடைய நினைவு வரவில்லை என்றால் அதனைப் பாழாகிப் போன தொழுகை என்கிறோம். அதேபோல நோன்பினூடாக ஒருவர் தக்வா பெறவில்லை என்றால் நோன்பினூடாகப் பெற வேண்டிய இலக்கினை அவர் அடையவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
தக்வா என்பதனை நாம் இறையச்சம் என்ற புரிதலினூடாகப் பார்த்தாலும் நோன்பு எந்த வகையில் ஒருவருக்கு இறையச்சத்தை ஏற்படுத்தும் என்பது அவதானிக்கத்தக்கதாகும். நோன்பிருப்பவர் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை என்பவற்றை சீர்தூக்கிப் பார்த்தால் அவை அனைத்தும் மனதைக் கட்டுப்படுத்தல் என்ற செயலுக்கான பயிற்சியாகவே அமைந்திருக்கின்றன. பசி வாட்டுகின்ற நிலையில் அறுசுவை உணவு முன்னால் இருக்கின்ற நிலையில் அதனைப் புசிக்காமல் இருப்பதற்கு அவன் தனது மனதைக் கட்டுப்படுத்திக் கொள்கிறான். கடுமையான தாகத்தினால் தொண்டை வறண்ட நிலையில் வாயிலெடுக்கும் தண்ணீரை உள்ளே விழுங்க விடாமல் அவன் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்கிறான். தனது மனைவியுடன் உடலுறவு கொள்வதைத் தடுத்திருப்பதும் அதற்குக் கடுமையான தண்டப் பிரகாரத்தை ( 60 நோன்பு) அறிவித்திருப்பதும் நோன்பிருந்த நிலையில் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியதன் கட்டாயத்தை எடுத்துக் காட்டுகிறது.
அதேபோன்று மனிதர்களுக்கு இயல்பாகிப் போன தவறுகளில் இருந்து தவிர்ந்து கொள்ளச் சொல்வதினூடாகவும் மனக் கட்டுப்பாட்டையே இஸ்லாம் பயிற்றுவிக்கிறது. யார் பொய்யான பேச்சுக்களையும் வீணான நடவடிக்கைகளையும் தவிர்த்துக் கொள்ள வில்லையோ அவர் பசித்திருப்பதிலும் தாகித்திருப்பதிலும் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.(ஆதாரம்: புஹாரி). அதேபோல மக்களிடம் இயல்பாகவே வெளிப்படுகின்ற புறம் பேசுதல் என்ற பாவத்தையும் நோன்பாளி தவிர்ந்திருக்க வேண்டும் எனவும் வாந்தி எடுத்தாவது அதிலிருந்து விடுபட வேண்டும் எனவும் சம்பவங்களின் ஆதாரத்துடன் தெரிவிக்கப்படுகிறது. சூழல் தாக்கத்தினால் செய்யப்படுகின்ற பெரும் பாவங்களை விட தனது மனோ இச்சை காரணமாகச் செய்கின்ற சிறு பாவங்களைக் குறிப்பிட்டுச் சொல்லி அவற்றிலிருந்து நோன்பிருப்பவர் தவிர்ந்திருக்க வேண்டும் எனச் சொல்வதன் ஊடாக மனக் கட்டுப்பாட்டையே இஸ்லாம் பயிற்றுவிக்க விளைகிறது.
அதேபோன்று ரமழானில் தூண்டப்படும் நற்செயல்களும் மனதைக் கட்டுப்படுத்துவதன் அவசியத்தை உணர்த்துவதாகவே அமைந்திருக்கின்றன. ஸஹர் செய்யுங்கள், அதில் பரக்கத் இருக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். ஸஹரை அழுத்திச் சொல்லியிருப்பது ஆழமான உறக்கத்தில் இருந்து எழுந்து அதிகாலைப் பொழுதில் பரிச்சயமில்லாத உணவை உண்பது என்பதுவே ஒருவர் மனதை வென்றுவிட்டார் என்பதற்கான அடையாளமாகும். இதற்கும் மேலாக ஒருவர் அடுக்கடுக்காகக் குர்ஆன் ஓதி, எண்ணிக்கைக் கணக்கில் இரவுத் தொழுகைகளிலும் ஈடுபடுவாராக இருந்தால் அவர் தனது உள்ளத்தை வெற்றி கொண்டதாகக் கருத முடியும். காற்றை விட வேகமாக ரமழானில் நபியவர்கள் ஸதகா கொடுத்தார்கள் என்று சொல்லப்படுவதும் மனதில் உள்ள கருமித்தனத்தை வென்று தானதர்மங்கள் செய்வதைத் தூண்டுவதாகவே அமைந்திருக்கின்றன. இப்படியாக ரமழானில் தூண்டப்படுபவையும் தவிர்க்கப்படுபவையும் உள்ளத்தைப் பயிற்றுவிப்பதாகவே காணப்படுகின்றன.
உடம்பில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது கெட்டு விட்டால் முழு உடம்பும் கெட்டு விடும். அது சீராக இருந்தால் முழு உடம்பும் சீராகிவிடும். அது தான் உள்ளம் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே மனதைச் சீராக்குவதுதான் வெற்றிக்கு வழி என்பது தெளிவாகிறது. அல்குர்ஆன் இது பற்றிக் கூறும் பொழுது ”மனதைத் தூய்மைப்படுத்தியவர் வெற்றி பெற்றார். அதனை பாவக்கறைகளால் மூடிக் கொண்டவர் தோல்வி அடைந்தார். (91: 9-10) என்று மனிதனின் வெற்றியும் தோல்வியும் மனதை அடிப்படையாகக் கொண்டதே என்று தெளிவாகக் கூறுகிறது.
இதே விடயத்தைத் தான் அல்குர்ஆன் பல இடங்களில் 'அல் ஆகிபத்து லில் முத்தகீன்' – இறுதி வெற்றி தக்வா உடையவர்களுக்கே - என்று சொல்கின்றது. ஏனெனில் தக்வா உள்ளவர்களே நேர்வழி பெறுவார்கள் என்பது அல்குர்ஆனின் கூற்றாகும். தக்வாவை நோன்பினூடாகப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அல்குர்ஆன் அதற்கு வழிகாட்டுகிறது. இந்த வகையில் அல்குர்ஆனின் மூலமாக நேர்வழி கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கும் அனைவரும் தக்வா உள்ளவர்களாகத் தம்மை மாற்றிக்கொள்ள ரமழானைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
உள்ளத்துக்கு வழங்கும் பயிற்சி தொடர்ச்சியாக இருக்க வேண்டும். அதனால் தான் ரமழான் ஒவ்வொரு வருடமும் எம்மிடம் வருகிறது. சிறிய விடயமாக இருந்தாலும் அல்லாஹ்விடம் விருப்பத்துக்குரியது தொடர்ச்சியாகச் செய்வதே என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். தொடர்ச்சியாகச் செய்யும் போது அதுவே பழக்கமாகி விடுகிறது. பழக்க வழக்கங்கள் நாளடைவில் வாழ்க்கை முறையில் ஓர் அங்கமாக மாறிவிடுகிறது. எனவே அதுவும் தனது வாழ்க்கையின் ஓர் அம்சமாக மாற வேண்டுமாக இருந்தால் அது தொடர்ச்சியாகச் செய்யப்பட வேண்டும். அதற்கான உளப்பயிற்சியைத்தான் ரமழான் காலம் நமக்குத் தருகிறது.
ஆகவே ரமழானில் நாம் பெற்றுக் கொள்கின்ற மனக் கட்டுப்பாட்டுப் பயிற்சியில் கவனம் செலுத்தி தக்வா உடையவர்களாக மாறி நேர்வழி பெற்றவர்களின் கூட்டத்திலே இணைந்து கொள்ள முயற்சிப்போம்.
பியாஸ் முஹம்மத்...
Add new comment