இலங்கை அரசு கைப்பற்றியுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்களது படகுகளை மீட்பது குறித்து ஏப்ரல் முதல் வாரத்தில் மீனவர் குழுக்களின் பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்படுமென்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ.க நிகழ்ச்சியில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை மதுரை வந்த மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும், அவர்களின் படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கை - இந்திய மீனவர்கள் குழுக்களின் சார்பில், மார்ச் முதல் வாரத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் பயனாக, கைதான தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படவுள்ளனர். மீனவர்களுக்காக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு குறூப் இன்சூரன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஏற்படும் சேதங்களை அரசு வழங்குமெனவும் அவர் தெரிவித்தார்.
(திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது)
Add new comment