29 இலட்சம் குறைந்த வருமான குடும்பங்களுக்கு இலவச அரிசி; கொழும்பிலிருந்து ஆரம்பம்

29 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று (26) கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பமானது.

திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெமட்டகொட, நாரஹேன்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தி இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இதன்படி, தெமட்டகொட, மிஹிதுசென்புர சனசமூக மண்டபத்தில் 995 பயனாளிகளுக்கும், நாரஹேன்பிட்டி தாபரே மாவத்தை சனசமூக மண்டபத்தில் 448 பயனாளிகளுக்கும், வெள்ளவத்தை ரஞ்சன் விஜேரத்னபுர சனசமூக மண்டபத்தில் 169 பயனாளிகளுக்கும் அரிசிப் பொதிகள் வழங்கப்பட்டன.

அரசாங்கத்தின் 2022/2023 பெரும் போக அரிசி கொள்வனவு மற்றும் அரிசி கையிருப்பு அகற்றல் திட்டத்தின் கீழ், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த இலவச அரிசி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்துக்கு மாதம் 10 கிலோ அரிசி என்ற அடிப்படையில் இரண்டு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

இந்த அரிசி மானியம், 20 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்குவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் அதனை 29 இலட்சம் குடும்பங்களாக அதிகரிக்க ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, காலி, மாத்தறை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

தெமட்டகொட மிஹிதுசென்புர சனசமூக மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய  சாகல ரத்நாயக்க, இலங்கை அதலபாதாளத்தில் சென்று கொண்டிருந்த வேளையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பினால்    திருப்புமுனையை ஏற்படுத்த முடிந்ததாக சுட்டிக்காட்டினார். 

அந்தத் திட்டத்திற்கு ஏற்ப எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் கடினமாக இருந்தபோதிலும், கடினமான மற்றும் குறுகிய காலத்திற்குள்  மக்கள் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உருவாக்க முடியும் என்பதால், அரசாங்கம் என்ற ரீதியில் அந்த கடினமான முடிவுகள் அனைத்தும் எடுக்கப்பட்டன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அன்று எடுக்கப்பட்ட தவறான பொருளாதார தீர்மானங்களினால் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய சாகல ரத்நாயக்க, இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டில் சரியான பொருளாதார வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாகவும்   தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகைதந்த மக்களின் தகவல்களை   சாகல ரத்நாயக்க  கேட்டறிந்ததோடு அவர்கள் முன்வைத்த   பிரச்சினைகளையும் செவிமடுத்தார்.

இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி. விஜேசிறி மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...