மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி அருள்மிகு திருமுருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்

மட்டக்களப்பின் தெற்கே 16 ஆம் மைக்கல் தொலைவில் படுவான் கரை எழுவான் கரையை ஒன்றிணைக்கும் மத்திய இடமாக விளங்கும் களுவாஞ்சியூரின் சூரைக்காடுள்; சூழ்ந்து வர இயற்கை அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்ற அழகிய இடமே சூரையடியாகும். இத்தகைய சிறப்புமிக்க எழில்மிகுந்த இடத்தில் முருகப்பெருமான் பதிகொண்டு பன்நெடுங்காலமாக பக்தர்களுக்கெல்லாம் அருள்கொடுத்து வரும் ஆலயமே ஸ்ரீ முருகன் ஆலயமாகும். எனவே இவ் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும் 26.03.2023 ஆம் திகதி வாஸ்த்து சாந்தியும் மறுநாள் 27.03.2023 ஆம் திகதி கொடியேற்ற அலங்காரத் திருவிழா 9 நாட்கள் நடைபெற்று பங்குனித்திங்கள் புதன்கிழமை 05.04.2023 ஆம் திகதி அன்று பங்குனி உத்தர திருநாளில் சமுத்திர தீர்த்த உற்சவம் இடம்பெற்று அன்னதான நிகழ்வோடு நிறைவு பெறவிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து 06.04.2023 ஆம் திகதி திருக்கல்யாணப்பூசையும் திருப்பொன்னூஞ்சல் நிகழ்வும் மறுநாள் 07.06.2023 அன்று வைரவர் பூசையுடன் நிகழ்வுகள் யாவும் இனிது நிறைவு பெறவிருக்கின்றன.

ஆலய வரலாறு
அடர்ந்த பற்றைக்காடுகள் நிறைந்த வனச் சோலையும் கடல்வளமும் மருதமரங்கள் சாப்பை புற்கள் தாமரைக்கேணியும் தென்னந்தோப்புகளும் ஒருங்கே அமையப்பெற்ற அழகு நிறைந்த வனத்தினுள்ளே களுவாஞ்சிகுடியை சேர்ந்த விசுவலிங்கம் மகேந்திரன் அவர்கள் 1975 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு வேலை வைத்து முத்துமாரியம்மனாக மனதில் நிறுத்தி குறிப்பிட்ட காலம் வழிபட்டு வந்ததன் பின்னர் அமரர்.க.கந்தசாமி அவர்கள் அவ் வேலை முருகப் பெருமானை நினைந்;து சிறிய பந்தலிட்டு வழிபட்டு வந்தபோது அதனைத்தொடர்ந்து தனக்கு உதவி நாடி . கணபதிப்பிள்ளை தெய்வநாயகம் அவர்களை அழைத்து தன்னுடன் இணைந்;து செயற்படுமாறு கேட்டதற்கிணங்க அவரும் இணைந்து பழைய கற்களை எடுத்து வந்து பந்தலை கட்டி வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து பெருமாள் மற்றும் ஆலயத்திற்கு தலைவராக இருந்து அமரத்துவமடைந்த கி. மகாதேவன் அவர்களும் வழிபட்ட வேளை ஒரு நிருவாக சபையை நிறுவி அதற்கு தலைவர் கந்தசாமி அவர்களும் செயலாளர் கி. மகாதேவன் அவர்களும் பொருளாளராக க. தெய்வநாயகமும் மற்றும் பல அன்பர்கள் நிருவாக சபை உறுப்பினர்களாகவும் இணைந்து செயற்பட்டு வந்தனர். பின்னர் ஓலைக்கிடுகினால் கொட்டகை அமைத்து வேலுக்குப் பதிலாக முருகப்பெருமானின் சிலையை வைத்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து ஆகம விதிக்கமைய ஒரு ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் கிராம மக்களிடம் நிதி அறவீடு செய்து ஆலயம் அமைத்து 2011ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் செய்து ஆலயம் புதுப்பொலிவு கண்டது.

வேல் வைத்து வழிபட்ட ஆரம்பகாலத்தில் சிவஸ்ரீ சுப்பிரமணியம், ஜெகதீஸ்வரக்குருக்கள் குறுகியகாலம் பூசை செய்து வந்ததுடன் அதனைத்தொடந்து ஆலயத்திற்கு நிரந்தர குருவாக கிரியாதிலகம், கிரியா வித்தகர், கிரியா ஜோதி அமரர். முருகுப்பிள்ளை முத்துக்குமாரன் குருக்கள் அவர்கள் பூசை திருவிழாக்களை நடாத்தி வந்தனர். பின்னர் அவரைத் தொடர்ந்து மகன் சிவஸ்ரீ மு. அங்குச சர்மா அவர்கள் அக்கடமையை செய்து வருகின்றார் ஆலய திருவிழா நிகழ்வுகளை சோதிட விற்பன்னர் சாமஸ்ரீ சிவஸ்ரீ ச.மயூரவதன சர்மா அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்

விசேட பூசைகள்:-
வருடாந்த அலங்கார உற்சவம்
கந்தசஷ்டி
சித்திரை வருடப்பிறப்பு
குமாராலய தீபம்
தைப்பொங்கல்
தைப்பூசம்
தீபாவளித் திருநாள்
பௌர்ணமி திருநாள் விசேட பூசைகள்

ஆலயம் பற்றிய நூல்கள்
இவ்வாலயத்தின் அலங்கார உற்சவம் நிறைவு பெற்று திருப்பொன்னூஞ்சல் நிகழ்வுக்கான பாடலை இயற்றி நூலுருவாக்கம் செய்து வெளியீடு செய்திருந்தார் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி பாக்கியரெத்தினம் ஆறுமுகம் அவர்கள் மற்றும் கந்தபுராணம் கற்பித்த பாடங்கள் எனும் நூலையும் ஆலயத்தில் அடியார்களுக்கு வழங்கியுள்ளார்.

இவ்வாறு சிறப்பு மிக்க ஸ்ரீ முருகன் ஆலயத்தில் அலங்கார உற்சவம் நடைபெறவுள்ளது. இக்காலப் பகுதியில் அடியார்கள் பூசைத் திரவியங்கள், பூமாலைகள், பூக்கள், நேர்த்திக்கடன் பொருட்களை வழங்கி முருகப்பெருமானின் அருளைப் பெறுக.

கலைச்சுடர், இலக்கிய வித்தகர்
நாராயணப்பிள்ளை நாகேந்திரன்
ஓய்வு நிலை அதிபர்


Add new comment

Or log in with...