வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலயத்தில் பாராட்டு விழா

ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் கடந்த வருடம் 2022 இல் தரம்- 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அதிபர் ஷல்மானுல் ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு-ஓட்டமாவடி கல்விக் கோட்ட பணிப்பாளரும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கல்வி முகாமைத்துவத்துக்குரிய பிரதிக்கல்விப் பணிப்பாளருமாகிய வீ.ரீ.அஜ்மீர், கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி(மஜீதி), மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர் மொஹமட் ஜெஸீர், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன பொறியியலாளர் ஏ.எஸ்.ஹஸ்ஸாலி, இலங்கை கிரிக்கெட் சபையின் தேசிய பயிற்றுவிப்பாளராகவும்,நடுவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி மொஹமட் ஹம்மாத், வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை அதிபர் ஏ.எம்.தாஹிர், ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலய அதிபர் எம்.ஐ.ஜெயினுலாப்தீன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பாடசாலையில் வெட்டுப்புள்ளியினை கடந்து சித்தியடைந்த 17 மாணவர்களும் தனித்துவமாக கௌரவிக்கப்பட்டதுடன் 100 புள்ளிகளை கடந்த 58 மாணவர்கள் புத்தகப்பை உள்ளிட்ட பெறுமதியான பரிசுப்பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட மாணவர்களும் நினைவுச்சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மாணவர்களது கலை நிகழ்ச்சியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் கற்பித்த ஆசிரியர்களான பி. தயாபரன், எம்.ஐ.நௌபுதீன் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியை ஹனபியா இஸ்தீன், பாடசாலை அதிபர் ஷல்மானுல் ஹரீஸ், பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

ஹரீஸ்


Add new comment

Or log in with...