ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள்தின நிகழ்வு அண்மையில் கொழும்பு_ 7-, லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்ஹான் பீபி இப்திக்கார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வு 'கிழக்கு மற்றும் மேற்கில் பெண்களின் உரிமைகளும் ,மதிப்புக்களும்' எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவி கலாநிதி தீபிஹா உடகம, சட்டத்தரணி சிவஸ்திகார அருலிங்கம், ஈரான் நாட்டில் இருந்து வருகை தந்த தெஹ்ரான் பெண்கள் கல்வி பற்றிய கலாநிதி ஸ்ஹேரேஹ் மிப்ராஜி, கொழும்பு பொதுவைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி நசிகா அமீர் ஆகியோர் தமது கருத்துகளை முன்வைத்தனர்.
எக்ஸ்பிரஸ் நியூஸ் -ஆங்கிலப் பத்திரிகையின் பிரதம ஆசிரியை ஹனா இப்ராஹிம் இந்நிகழ்வினை நெறிப்படுத்தினார். வரவேற்புரையை மீடியா போரத்தின் செயலாளர் சிஹார் அனீஸ், மீடியா போரத்தின் ஆலோசகர் என்.எம். அமீன் ஆகியோர் ஆற்றினர்.
இந்நிகழ்வின்போது முஸ்லிம் பெண்களின் கலைகலாசாரம் மற்றும் முஸ்லிம் பெண்களின் உரிமைகள் பற்றி இஸ்லாம் மதத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள், பெண்கள் இஸ்லாமிய வாழ்க்கை முறையில் எவ்வாறு வாழ வேண்டும் என்ற விடயங்கள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. இஸ்லாம் மார்க்கமே பெண்களுக்கு சகல உரிமைகளையும் வழங்கியுள்ளது எனவும் ெடாக்ர் நசிஹா அமீர் உரை நிகழ்த்தினார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவி தீபிஹா உடகம இங்கு உரைநிகழ்த்துகையில், "அல் குர்ஆனில் சூறா நிசாவில் பெண்களுக்கான உரிமை பற்றி மிகத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சகல உரிமைகளும் பெண்களுக்கும் உள்ளன. இது எத்தனை முஸ்லிம்களுக்கு தெரியுமோ தெரியாது.
எனது சட்டக்கல்லுாரியின் சட்டவகுப்பில் பயில்வோரில் 95 வீதமானவர்கள் பெண்கள். ஆண்கள் 5 வீதம் மட்டுமே உள்ளார்கள். பொறியியல் பீடம் மற்றும் கணினி தொழில்நுட்பப் பிரிவில் ஆண்கள் 75 வீதமும் பெண்கள் 25 வீதமுமே உள்ளனர்.
உலகில் உள்ள சகல மதங்களும் பெண்களுக்கான உரிமைகளை சமமாக வழங்கியுள்ளன. இலங்கை அரசியலமைப்பில் உள்ளூராட்சித் தேர்தலின்போது கட்டாயம் 25 வீதம் பெண் உறுப்பினர்கள் இருத்தல் வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அரசியலமைப்பினை உருவாக்கும் ஆணைக்குழுவில், அமைப்புக்களில் பெண்கள் அங்கத்தவர்களாக இல்லை. பெண்களுக்கு தொழில், சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு போன்ற சகல உரிமைகளும் ஆண்களுக்கு உள்ளது போன்றே சமமாக உள்ளன. இலங்கையில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலேயே 1931 இல் வழங்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வின்போது முஸ்லிம் மீடியா போரத்தின் வெளியீடான 'முஸ்லிம் ஊடகவியலாளர்கள்' மற்றும் இலங்கை பொது தகவல்கள் அடங்கிய டயரிகளும் அதிதிகளுக்கு கையளிக்கப்பட்டன. மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்கள், பெண் ஊடகவியலாளர்கள், பெண்கள் அமைப்பின் உறுப்பினர்கள், சட்டக் கல்லுாரி மாணவிகள், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசி, ஈரான் நாட்டின் கலாசாரப் பணிப்பாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அஷ்ரப் ஏ சமத்...
Add new comment