மே மாதத்தில் 33,000 ஆசிரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை

- 26,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி பரீட்சை

26,000 பட்டதாரி ஆசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான பரீட்சை எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடளாவிய 141 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் 53,000 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இரு முறைமைகளுக்கு இணங்க எதிர்வரும் மே மாதத்தில் 33,000 பேருக்கு ஆசிரிய நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடை க்கான வினாக்கள் வேளையில் வசந்த யாப்பா பண்டார எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் தற்போது நாடளாவிய ரீதியில் ஆசிரிய இடமாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை, 7500 கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களின் பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தினால் தேசிய கல்வி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கு மீளாய்வு மேற்கொண்டதன் பின்னர் இந்த மாத இறுதிக்குள் பெறுபேறுகள் உத்தியோகபூர்மாக வெளியிடப்படும்.

அவர்கள் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர். அதன் மூலம் மாகாண பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்கள் பிரச்சனை முடிவுக்கு வரும்.

அதற்கு மேலதிகமாக 26 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை அவர்களுக்கான பரீட்சை நடைபெறவுள்ளது. பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்கள் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 53,000 பட்டதாரிகள் அந்த பரீட்சையில் தோற்றவுள்ளதுடன் நாடளாவிய 141 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை நடைபெறவுள்ளது. அதன் பெறுபேறுகளை விரைவில் வெளியிட எதிர்பார்த்துள்ளோம்.

கல்விப் பொது தரதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் முன்னெடுக்கப்படவுள்ளது. அதனை யடுத்து நாம் பெறுபேறுகளை மாகாணங்களுக்கு அனுப்பவுள்ளோம். அங்கு நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு மாகாண அடிப்படையில் அந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இரு முறைமையின் கீழ் 33,000 ஆசிரியர்களை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மே மாத நடுப்பகுதியில் இவர்களுக்கு நியமனங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் நாம் கண்காணிப்பு ஒன்றை மேற்கொண்டு வருகின்றோம் விஞ்ஞானம் கணிதம் ஆங்கிலம் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கு உயர் தரத்திற்காக ஆசிரியர்களை நியமித்து அதில் ஏற்படும் பற்றாக்குறையை நாம் தனியாக மாகாண ரீதியில் நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் அண்மையில் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியான பட்டதாரிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கல்வியமைச்சு முன்னெடுத்து வருகிறது.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...