ட்வீட் பதிவுக்கு சவூதியில் சிறை சென்றவர் விடுதலை

ட்விட்டரில் சவூதி அரசை விமர்சித்து பதிவிட்டதற்காக, ஓர் ஆண்டுக்கு மேல் சிறை அனுபவித்த அமெரிக்க பிரஜை ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சவூதி பிரஜையுமான 72 வயதான சாத் இப்ராஹிம் அல்மதி, 2021 நவம்பரில் தமது குடும்பத்தினரை பார்க்க சவூதி வந்தபோது கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவில் இருந்தபோது வெளியிட்ட ட்விட்டர் இடுகைக்காக அவருக்கு கடந்த ஆண்டில் 16 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் அல்மதியின் விடுதலை பற்றி அமெரிக்கா அல்லது சவூதி நிர்வாகம் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

அவர் தற்போது ரியாதில் உள்ள தனது வீட்டில் இருப்பதை அவரது மகன் இப்ராஹிம் உறுதி செய்துள்ளார். சவூதி அரசை சீர்குலைக்க முயன்றது மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தது மற்றும் ஆதரவளித்ததாகவே அல்மதி சவூதி நீதிமன்றம் ஒன்றினால் குற்றங்காணப்பட்டார். அவருக்கு 16 ஆண்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஒரே ஆதாரமாக தனது தந்தை பதிவிட்ட 14 ட்விட்களே நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டதாக அல்மதியின் மகன் குறிப்பிட்டுள்ளார்.

இதில் மக்கா மற்றும் ஜித்தா நகரங்களின் பண்டைய பகுதிகளை உடைத்துத் தகர்த்தது பற்றி விமர்சனம், சவூதியில் நிலவும் வறுமை பற்றிய கவலை, அதேபோன்று கொல்லப்பட்ட சவூதி ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியை மேற்கோள் காட்டிய கூற்று போன்றவற்றையே அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...