ஈரான் ஜனாதிபதிக்கு சவூதி அழைப்பு

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றுக்கு சவூதி அரேபியா அழைப்பு விடுத்திருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளை மீள ஆரம்பிக்க இணங்கி ஒரு வாரம் கடந்த நிலையிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சவூதி மன்னர் சல்மானிடம் இருந்து வந்த கடிதத்திலேயே இந்த அழைப்பு வந்திருப்பதாக கூறப்பட்டபோதும், இது தொடர்பில் சவூதி இன்னும் உறுதி செய்யவில்லை.

இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் போக்கே அண்மைய வரலாற்றில் மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

சீனாவின் மத்தியஸ்தத்தில் இந்த இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளை மீள ஆரம்பிக்க இணங்கி இருப்பது பிராந்தியத்தின் பூகோள அரசியலில் பெரும் திருப்பமாக மாற வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் மூத்த ஈரானிய அதிகாரி ஒருவரான முஹமது ஜம்ஷிதி, சவூதி அரேபியாவில் இருந்து வந்த அழைப்பு தொடர்பில் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். அதில் ரைசிக்கு சவூதி அழைப்பு விடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பதோடு, ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஈரான் தயாராக இருப்பதாகவும் வலியுறுத்தியுள்ளது.

இதேநேரம் இரு நாடுகளும் வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த இணங்கி இருப்பதாகவும் அந்த சந்திப்புக்கு மூன்று சாத்தியமான இடங்கள் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹொஸைன் ஆமிர் அப்தொல்லாஹியான் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார். எனினும் குறிப்பிட்ட அந்த இடங்கள் மற்றும் பேச்சுவார்த்தை இடம்பெறுவதற்கான திகதி பற்றி அவர் எந்த விபரமும் வெளியிடவில்லை.

சீனாவின் மத்தியஸ்தத்தில் அண்மையில் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இரு மாதங்களுக்கு பரஸ்பரம் தூதரகங்களை திறப்பதற்கும் வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் இரு நாடுகளும் இணங்கின.

ஷியா மதத் தலைவர் ஒருவருக்கு சவூதி மரண தண்டனை நிறைவேற்றிய நிலையில், 2016 ஆம் ஆண்டு டெஹ்ரானில் உள்ள தூதரகத்தின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தே ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை சவூதி துண்டித்தமை குறிப்பிடத்தக்கது.

சிரியா மற்றும் யெமன் உள்நாட்டுப் போர் உட்பட பல்வேறு பிராந்திய பிரச்சினைகளில் ஷியா பெரும்பான்மை ஈரான் மற்றும் முக்கிய சுன்னி நாடான சவூதி அரேபியா எதிர் தரப்புகளில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...