நாடு மீண்டெழுந்து வருவதை வெளிப்படுத்தும் அறிவிப்பு

அலரிமாளிகையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற வைபவமொன்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முக்கிய அறிவிப்பை விடுத்துள்ளார். 'வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டோம்' என்பதுதான் அந்த அறிவிப்பு.

இந்நாடு கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் அந்நிய செலாவணிப் பற்றாக்குறையோடு பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க ஆரம்பித்தது. அதன் விளைவாக எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களின் விலைகள் பெரிதும் அதிகரித்தன. எரிபொருள் மற்றும் எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்காக நாட்கணக்கில் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலை தோற்றம் பெற்றது. இந்நிலையில் பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட வாகன போக்குவரத்து பெரும்பாலும் ஸ்தம்பித நிலையை அடைந்தது. அதன் காரணத்தினால் இந்நிலைமைக்குத் தீர்வும் நெருக்கடிகளுக்கு நிவாரணமும் கோரி ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்தும் நிலைக்கு மக்கள் உள்ளாகினர்.

அதேநேரம் இப்பொருளாதார நெருக்கடியோடு சேர்த்து அரசியல் நெருக்கடியும் தோற்றம் பெற்றது. அதனால் பிரதமர் உட்பட அமைச்சரவையினர் தம் பதவியை இராஜிநாமா செய்தனர். இருந்த போதிலும் பொருளாதார நெருக்கடிகளின் தாக்கம் குறையவும் இல்லை. அவர்களது பதவி விலகல் தீர்வாக அமையவும் இல்லை. மே, ஜுன், ஜுலை ஆகிய மாதங்களில் இப்பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்து தீவிர நிலையை அடைந்தது.

அதன் விளைவாக அன்றைய ஜனாதிபதி, நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் தம் பதவியை இராஜிநாமா செய்தார். இந்தச் சூழலில் நாட்டின் தலைமையைப் பொறுப்பெடுக்க எவரும் முன்வரவில்லை. இந்த இக்கட்டான சூழலில் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு தலைமைத்துவம் வழங்கும் பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இவர் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் போது எரிபொருள், எரிவாயு, பசளை உட்பட அத்தியாவசியப் பொருட்களுக்கு பாரிய நெருக்கடி நாட்டில் நிலவிக் கொண்டிருந்தது. நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருந்தது. அந்நெருக்கடிகள் அனைத்தையும் சவால்களாகக் கருதி பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை முழுமையாக மீட்டெடுப்பதற்கான வேலைத்திட்டங்களை அவர் ஆரம்பிக்கலானார். கடந்த காலத்தில் இந்நாடு முகம்கொடுத்த பொருளாதார நெருக்கடிகளை ஏற்கனவே வெற்றிகரமாக கையாண்டு முகாமைத்துவம் செய்த அனுபவத்தைப் பின்புலமாகக் கொண்டு அவர் இந்நடவடிக்கைகளை முன்னெடுக்கலானார். இதன் நிமித்தம் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இதன் பிரதிபலனாக கடந்த வருடம் மே முதல், ஜுலை வரையான காலப்பகுதியில் நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் தீவிர நிலை தற்போது முற்றிலும் நீங்கியுள்ளது. அன்று சமுகக் கட்டமைப்பில் காணப்பட்ட நிலைமைக்கும் தற்போதைய நிலைமைக்கும் இடையில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஏழு மாத காலப்பகுதிக்குள் அனைத்து கட்டமைப்புகளும் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள். எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடுகள் இன்றி இன்று கிடைக்கப்பெறக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் நிலவிய பொருளதாரப் பாதிப்புகள் ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ளன.

இந்தச் சூழலில் அலரிமாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றியுள்ள ஜனாதிபதி, 'பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மூச்சுவிடும் சூழலை சர்வதேச நாணய நிதியம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. பொருளாதாரம் கடந்த வருடத்தை விடவும் தற்போது ஒப்பீட்டளவில் ஸ்திரமடைந்துள்ளது. அதனால் நாடு தற்போது வங்குரோத்து நிலையில் இல்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு நாட்டு மக்கள் மத்தியில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் மேலும் வலுப்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது.

இந்நாடு கடந்த வருடம் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி மீண்டும் ஒருபோதும் நாட்டில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதுதான் அனைத்து தரப்பினரதும் எதிர்பார்ப்பாகும். அந்தளவுக்கு அசௌகரியங்களையும் தாக்கங்களையும் பொருளாதார நெருக்கடிக் காலத்தில் இந்நாட்டு மக்கள் அனுபவித்துள்ளனர்.

நாடு இக்கட்டான நிலைக்கு உள்ளாகி இருந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தலைமைப்பதவியை ஏற்றிருந்தார். நாடு மீட்சிபெற்று வருகின்ற இவ்வேளையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து முழுமையாக மீட்சி பெறுவதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கப்பட வேண்டும். அதுவே நாட்டினதும் மக்களினதும் நலன்களில் அக்கறை கொண்டுள்ள ஒவ்வொருவரினதும் பொறுப்பும் கடமையும் ஆகும்.


Add new comment

Or log in with...