நீதிமன்ற உத்தரவுக்கமைய ஜெ. ஶ்ரீரங்கா கைது

- 2011 விபத்து வழக்கின் சாட்சியாளரை அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீரங்கா கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கமைய அவர் இன்று (17) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெ. ஶ்ரீரங்கா உடல் நலகுறைவு காரணாமாக களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2011 ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி  வவுனியா, செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு அருகில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீரங்கா மன்னார் நோக்கிப் பயணித்த வாகனம் மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் ஶ்ரீ ரங்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தராக செயற்பட்டிருந்த ஜயமினி புஸ்பகுமார எனும் பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவர் உயிரிழந்தார்.

இது தொடர்பான வழக்கு வவுனியா மேல்நீதிமன்றில் இடம்பெற்று வந்ததுடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியங்கள் மற்றும் தகவல்களை மாற்றியமைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஜெ. ஶ்ரீ ரங்கா உள்ளிட்ட மேலும் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரே வாகனத்தை செலுத்தியதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீரங்காவே வாகனத்தைச் செலுத்தியதாகவும் பொலிஸ் உத்தியோகத்தர் வாகனத்தின் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்தார் எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் குற்றத்திரித்தில் தெரிவித்துள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பான சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டிலேயே குறித்த 6 பேரையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) அமரசிறி குமார சேனாரத்ன, பொலிஸ் அத்தியட்சகர்களான (SP) ஹரிஸ் சந்திர பண்டார, அஜித் பிரியதர்ஷன ஹேரத், செட்டிக்குளம் முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுகத் ரொஹான் சஞ்சீவ, முன்னாள் செட்டிக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் வழக்கு தொடர்பில் கடந்த 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டு அன்றைய தினமே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கின் சாட்சி ஒருவரை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் மற்றும் அது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவரை கைது செய்யுமாறு வவுனியா மேல் நீதிமன்றம் இனறு பொலிசாருக்கு உத்தரவிட்டிருந்ததற்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Add new comment

Or log in with...